ஆப்கனில் தவித்த இந்தியர்கள் ..! கை கொடுத்து கரையேற்றிய அரசு..!

0 2880
ஆப்கனில் தவித்த இந்தியர்கள் ..! கை கொடுத்து கரையேற்றிய அரசு..!

இந்தியர்கள் 107 பேர் உள்பட மொத்தம் 168 பேருடன் காபூலில் இருந்து வந்த விமானப்படையின் சி-17 விமானம், ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. இவர்களையும் சேர்த்து இந்தியர்கள் சுமார் 500 பேர் காபூலில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பி உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட அந்நாடு முழுவதையும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  16 ஆம் தேதி இந்திய தூதரத்தினர் உள்ளிட்ட 125 பேர் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து தஜகிஸ்தான் வழியாக 87 பேர் மீட்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக காபூலில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் 135 பேர் நேற்றிரவு புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தனர். இந்த நிலையில் 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பேருடன் விமானப்படையின் சி-17 விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது.168 பேருடன் காபூலில் இருந்து புறப்பட்ட சி17 விமானம் இன்று காலை டெல்லிக்கு அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் ஆப்கன் எம்பி நரேந்தர் சிங் கல்சாவும் வந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக எட்டப்பட்ட வளர்ச்சி இப்போது ஒன்றுமில்லாமல் ஆகி விட்டதாக அவர் அழுதவாறு கூறினார்.

விமானத்தில் கைக் குழந்தை ஒன்றும் தனது தாயுடன் வந்தது. இந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் இல்ல என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் அந்த குழந்தை அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அது பற்றி ஒன்றும் கவலைப்படாமல் அந்த குழந்தை தனது சகோதரியுடன் முத்தமிட்டு விளையாடும் நெகிழ்ச்சியான காட்சி வெளியாகி உள்ளது.

விமானத்தில் வந்த 168 பேருக்கும் RT-PCR சோதனை நடத்தப்பட்டது. ஆப்கனில் இருந்து வரும் அனைவருக்கும் இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை விமானங்கள் காபூல் சென்று இந்தியர்களை மீட்பதற்கு, காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள நேட்டோ படையினர் அனுமதி அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தினமும் 2 விமானங்கள் வாயிலாக ஆப்கனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments