காரை முட்டித் தள்ளிய யானை.. டிரைவரின் திக் திக் நிமிடங்கள்..!

0 4708
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானை, கார் ஒன்றை முட்டித் தள்ளிய பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. யானை முன்னோக்கி வந்த போது சமயோஜிதமாக காரை பின்னோக்கி மெதுவாக இயக்கி உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள் கேமராவில் பதிவாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானை, கார் ஒன்றை முட்டித் தள்ளிய பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. யானை முன்னோக்கி வந்த போது சமயோஜிதமாக காரை பின்னோக்கி மெதுவாக இயக்கி உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள் கேமராவில் பதிவாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள், அவ்வப்போது உணவு தேடி ஊருக்குள் புகுவதும், வாகன ஓட்டிகளை வழிமறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், அதிகாலையில் குட்டிகளுடன் வனத்தை விட்டு வெளியேறிய 4 காட்டு யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்தன.

யானைகள் கூட்டத்தை பார்த்த வாகன ஓட்டிகளும், வேகத்தை குறைத்து மெல்ல வாகனங்களை இயக்கிச் சென்றனர்.

அப்போது, அங்கு மெதுவாக வந்த கார் ஒன்றை யானைகள் கூட்டம் வழிமறித்தது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை மெதுவாக பின்னோக்கி எடுத்துச் செல்ல, பதிலுக்கு யானைகளும் காருக்கு முன்னாடியே வேகமாக வந்தன.

பின்னர், திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு யானை மட்டும் காரை வேகமாக துதிக்கையால் ஒரு முறை முட்டி தள்ளியது. இந்த திக் திக் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.

யானை முட்டித் தள்ளிய போதும் பதற்றம் அடையாத கார் ஓட்டுநர் சில நிமிடங்கள் காரை நிறுத்தினார். இதனால் ஆவேசம் தணிந்த யானை அந்த இடத்தில் இருந்து நகர, பின்னர் சிறிது நேரம் கழித்து காரை ஓட்டிக் கொண்டு அவர் அங்கிருந்து சென்றார். இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் எனவும், யானைகளை கண்டால் வாகனங்களை யானைகளின் அருகே ஓட்டிச் செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments