16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்..!

0 4221
சென்னை கலைவாணர் அரங்கில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது

நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ உள்ளிட்டோருடன் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றும், சர்வதேச அளவிலான பொருளாதார நிபுணர்கள் அதில் இடம்பெறுவார்கள் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கு தனி பட்ஜெட், நீட் தேர்வு பாதிப்புகளை தடுக்க சட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஒன்றிய அரசுடன் நல்லுறவைப் பேணும் அதேசமயம் மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அதை கடுமையாக தமிழ்நாடு எதிர்க்கும் என அவர் குறிப்பிட்டார். 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உண்மையான நிதிநிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியிடப்படும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட், உழவர் சந்தைகளுக்கு புத்துயிரூட்டுதல், மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைத்தல் ஆகிய அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் இடம்பெற்றன.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும், அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகளை விரைவாக முடித்திடவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், ஆணைமலையாறு அணை கட்ட கேரள அரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு, நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க சட்டங்கள் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.

ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கொரோனா தொற்று குறைந்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0, பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதியுடன் துணை நகரங்கள், சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு, அனைத்து முக்கிய நகரங்களுக்கும் புறவழிச் சாலைகள், மதுரவாயல்-சென்னை துறைமுக உயர்மட்ட சாலைத் திட்டம் விரைவுபடுத்தப்படும், பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந்தோறும் விடுதிகள் ஆகிய அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டுள்ளது.

 சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் நலன்களை பாதுகாப்பது தொடர்பாகவும் ஆளுநர் உரையில் கருத்துகள் இடம்பெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments