பிரதமர் மோடி மதுரையில் இன்று தேர்தல் பிரச்சாரம்

0 1793
பிரதமர் மோடி மதுரையில் இன்று தேர்தல் பிரச்சாரம்

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, மதுரை மற்றும் கன்னியாகுமரியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை தாராபுரம் மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று அவர் மதுரை மற்றும் கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் 36 வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டிப் பேசுகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

 மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி எம்.பி. தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப்பேரவைக்கு போட்டியிடும் அ.தி.மு.க., பாஜ.க. வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.

 முன்னதாக, நேற்று இரவு மதுரை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து நேராக மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலுக்குச் சென்றார். தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து வந்த பிரதமருக்கு, கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மன், சுவாமி சன்னிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதிக்கு சென்று அவர் வழிபட்டார். கோவிலை சுற்றிப் பார்த்த பிரதமருக்கு தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் அதிகாரிகள் அக்கோவிலின் சிறப்புகளை விளக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments