வறண்ட கண்மாயில் திரண்ட நீர்...உற்சாகத்தில் உசிலம்பட்டி மக்கள்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பல ஆண்டுகளாக தூர்ந்துபோய்க் கிடந்த கண்மாயை தூர்வாரிய இளைஞர்கள், தூர்வாரும் பணிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களையும் வரவு, செலவு கணக்குகளையும் பேனர் அடித்து காட்சிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
24 வார்டுகளைக் கொண்ட உசிலம்பட்டி நகராட்சிக்கு வாரம் ஒருமுறை, ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் கோடைகாலம் நெருங்கிவிட்டால் தண்ணீர் தட்டுப்பாடு தலைகாட்டத் தொடங்கி விடும். “உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு” என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண முடிவெடுத்தனர். அதன்படி பேருந்து நிலையம் எதிரே சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து, பல ஆண்டுகளாக தூர்ந்து, நீரின்றி வறண்டு கிடக்கும் கண்மாயை சீரமைக்க திட்டம் தீட்டினர்.
கண்மாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக் கடிதம் வாங்கி, அதனை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்பித்து மளமளவென காரியத்தில் இறங்கினர். தூர்வாரும் பணிக்காக ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து, முதற்கட்டமாக கண்மாயை ஆக்கிரமித்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றினர். தொடர்ந்து மேடான பகுதிகளில் இருந்த மண்ணை அகற்றி, அதனை கரைகளில் கொட்டி பலப்படுத்தினர். இரவு பகலாக இந்த வேலை தொடர்ந்தது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவிலான இந்தக் கண்மாய் இளைஞர்களின் சீரிய பங்களிப்பினால் ஒரே மாதத்தில் முழுவதுமாக தூர்வாரப்பட்டு, தண்ணீர் தேக்க தயார் நிலைக்கு வந்தது. கடந்த மாதம் வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் கண்மாயை வந்தடைந்து நிரம்பத் தொடங்கியுள்ளது. கண்மாய்க் கரையில் மரக்கன்றுகளை நட்டு, கரைப்பகுதிகளையும் அழகுப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக வறண்டுபோய், கருவேல மரங்கள் அடர்ந்து கிடந்த கண்மாயில் தண்ணீரைப் பார்க்கும் அப்பகுதி மக்கள், 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழுவினருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். அடுத்த மூன்றாண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும், நிலத்தடி நீரும் கணிசமாக உயரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான மக்களிடம் நிதி வசூல் செய்தே கண்மாயை தூர்வாரும் பணியை இளைஞர்கள் மேற்கொண்டனர். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அத்தனை பேரின் பெயர்கள் மற்றும் அவர்கள் அளித்த நன்கொடையின் விவரங்களை பெரிய அளவில் பேனர் அடித்து காட்சிப்படுத்தியுள்ள இளைஞர்கள், வரவு செலவு கணக்குகளையும் அதில் பதிவு செய்து, தங்களது நேர்மையை பறைசாற்றியுள்ளனர்.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நமது முன்னோர்கள், தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க ஊர் தோறும் இதுபோன்ற நீர்நிலைகளை ஏற்படுத்தி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அந்தந்தப் பகுதிகளிலுள்ள தன்னார்வலர்கள் முன்வந்து அவற்றை முறையாகப் பராமரிக்கத் தொடங்கினாலே, எப்படிப்பட்ட கோடைகாலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதே நிதர்சனம்
Comments