கிரிக்கெட் வீரர் அஸ்வின்...பிரதமர் மோடியிடமும் ‘வலிமை’ அப்டேட்..! அப்செட்டான அஜீத் அறிக்கை

0 14221
கிரிக்கெட் வீரர் அஸ்வின்...பிரதமர் மோடியிடமும் ‘வலிமை’ அப்டேட்..! அப்செட்டான அஜீத் அறிக்கை

மிழகத்தில் இந்தவாரம் வெளியான படங்கள் ரசிகர்களை கவராததால் திரையரங்குகள் காற்று வாங்கி வரும் நிலையில், தயாரிப்பில் இருக்கும் அஜீத்தின் வலிமை படத்தின் வெளியிட்டு தேதிக்காக ரசிகர்கள் செய்யும் சேட்டை எல்லை மீறிபோனதால் அப்சட் ஆன  நடிகர் அஜீத்குமார் அறிக்கை விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தால் வசூல் மழையில் நனைந்த திரையரங்கு உரிமையாளர்கள் இந்த வாரம் வெளியான புதிய படங்களுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்து விட்டதால் காட்சிகளை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

100 சதவீத இருக்கை அனுமதிக்கப்பட்ட நிலையில் பல திரையரங்குகள் பார்வையாளர்கள் இன்றி காற்று வாங்குகின்றன. இந்த நிலையில் இன்னும் வெளியீட்டுக்கே தயாராகாத நடிகர் அஜீத்குமாரின் வலிமை படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி இருக்கின்றது.

வலிமை படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் வலிமை படம் எப்போது திரைக்கு வரும் என்றும் அதற்கு முன்பாக பர்ஸ்ட் லுக், டீசர் எப்போது வெளியிடுவார்கள் என்று கேட்டு அஜீத் ரசிகர்கள் செய்யும் சேட்டை எல்லை மீறிச்சென்றது.

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பதாகையுடன் சென்றிருந்த அஜீத் ரசிகர்கள் சிலர் அந்த பதாகையின் பின்புறம் வலிமை அப்டேட் என எழுதி வைத்து சரியாக பிரதமர் தங்களை கடந்து செல்லும் சமயத்தில் மோடி அய்யா வலிமை அப்டேட் சொல்லுங்க.... என்று கேட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து டுவிட்டரில் வைரலாக்கினர்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வினிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அட்ராசிட்டி செய்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவிட்டு டுவிட்டரை தெறிக்கவிட்டனர்

அஜீத்தின் வலிமையை உலகிற்கு காட்டுவதாக நினைத்து ரசிகர்களின் அட்டகாசம் கைமீறிபோவதை உணர்ந்த அஜீத் மவுனம் கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார், வலிமை அப்டேட் என்று ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் தம்மை வருத்தமடையச் செய்திருப்பதாகக் கூறியுள்ள நடிகர் அஜீத், ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தன் ரசிகர்கள் என்ற பெயரில், தான் நடித்துள்ள வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு, அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமுற வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அஜீத், முன்னரே அறிவித்தபடி வலிமை படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து தான் முடிவு செய்யும்வரை பொறுமையுடன் காத்திருக்கவும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அஜீத்

நாம் செய்யும் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும் என்றும் உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே என்றும், ஆனால் தனக்கு சினிமா ஒரு தொழில் என்று கூறியுள்ள அஜீத், தான் எடுக்கும் முடிவுகள் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவையாக இருக்கும் எனவும் தன் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதனை உணர்ந்து செயல்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் நடிகர் அஜீத் குறிப்பிட்டுள்ளார்.

அஜீத்தை தொடர்ந்து வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் , டுவிட்டர் மூலம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை ரீடுவிட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் , தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்டபார்வை என இரு வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பதால் வலிமை படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்பது கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments