காவல்நிலையத்திற்கு ஜாமீன் கையெழுத்து போட வந்தவர் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி : நெல்லையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் காவல்நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட வந்தவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கண்ணபிரான் என்ற அந்த நபர், வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று அங்குள்ள காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வருகிறார். இன்று வழக்கம்போல் அவர் கையெழுத்திட வந்தபோது, இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் இருவர் துரத்தி வந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பி கண்ணபிரான் காவல் நிலையத்துக்குள் நுழைந்துவிடவே, மர்ம நபர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், கண்ணபிரானின் வீட்டருகேயும் இரண்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 4 குண்டுகள் வெடித்த நிலையில், வெடிக்காத ஒரு குண்டை கைப்பற்றிய போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments