ஸ்ரீவைகுண்டம் அருகே மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. படுகொலை..!

0 32472

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை மினி லாரியை ஏற்றி கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். போதை தலைக்கேறி புத்தி மாறி போனதின் விளைவாக நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

தூத்துக்கடி மாவட்டம் கொற்கை விளக்கை சேர்ந்த முருகவேல் என்பவன் நேற்றிரவு குடிபோதையில் ஹோட்டலில் தகராறில் ஈடுபட்டுள்ளான்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று, முருகவேலை கண்டித்ததோடு, அவன் வைத்திருந்த மினி லாரியையும் பறிமுதல் செய்துள்ளார். அப்போதும், அடங்காமல் காவல் நிலையம் சென்று தகராறில் ஈடுபட்ட முருகவேலுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார் எஸ்.ஐ.பாலு.

பின்னர், காவல் நிலையத்தில் இருந்து சென்று, சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டுள்ளான். ரோந்து பணியின் போது இதனை கண்ட எஸ்.ஐ., அவனை அங்கிருந்து விரட்டியடித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த முருகவேல், நண்பருடைய மினி லாரியை எடுத்து வந்து, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற உதவி ஆய்வாளர் பாலு மீது ஏற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பைக்கை ஓட்டிச் சென்ற மற்றொரு காவலர் பொன் சுப்பையா படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்  விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜரான கொலையாளி முருகவேலை, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எஸ்.ஐ.யின் உடலுக்கு தென் மண்டல ஐஜி முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

இதனிடையே, உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பணியில் இருந்த போது உயிரிழந்ததால், உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு சிறப்பினமாக, 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும்  அறிவித்துள்ளார். உதவி ஆய்வாளரை கொலை செய்த நபரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் பாலுவின் உடல் சொந்த ஊரான முடிவைத்தானேந்தல் கொண்டுவரப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக மயானத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து துப்பாக்கிக் குண்டுகள் முழங்க எஸ்.ஐ பாலுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments