பெட்டியில் புகார் மனுக்கள்.. 100 நாட்களில் தீர்வு... உறுதி கொடுத்த மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தனி இலாகா அமைக்கப்பட்டு, 100 நாட்களில் தீர்வு காணப்படும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ள மு.க.ஸ்டாலின், முதலாவதாக திருவண்ணாமலை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். நகராட்சி அலுவலகம் அருகே கலைஞர் திடலில் இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. அதில் மனுக்களை செலுத்தியவர்களுக்கு உடனடியாக ஒப்புகைச் சீட்டும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த கருணாநிதி, ஆட்சியில் அமர்ந்ததும் அதனை செய்து காட்டினார் என குறிப்பிட்டார். இதுவரை தாம் வகித்த பதவிகள் அனைத்தையும் பொறுப்புகளாகவே கருதியதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எல்லா துறையிலும் எல்லா மக்களும் அகலபாதாளத்திற்கு சென்று உள்ளார்கள் என்று குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
Comments