ஆப்ரிக்கா நாட்டு பாணியில் கடத்தல்..100 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு

ஆப்ரிக்கா நாட்டில் நடப்பது போன்று, ராஜஸ்தானில் கிராமத்தில் பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தியுள்ளது. கடத்தப்பட்ட 38 பெண்களையும் , குழந்தைகளையும் ராஜஸ்தான் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
ராஜஸ்தான் - மத்தியபிரதேச மாநில எல்லையில் உள்ள பாமன் தேவ்ரியா பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்ஹெல் காவல் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த பகுதியில் , 38 பெண்கள் மற்றும் குழந்தைகள் 100 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டனர் . கடத்தப்பட்ட அனைவரும் கஞ்சர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கடத்தல்காரர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் கல்சியா கிராமத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கல்சியா கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதாகவும் அதற்கு காரணம் பாமன் தேவ்ரியா கிராம மக்கள் தான் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த கல்சியா மக்கள் பெண்களை கடத்தியதாக சொல்லப்படுகிறது.
பேருந்து மற்றும் பிற வாகனங்களில் வந்த அந்த கும்பல் வாள் உட்பட பல கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தது. பின்னர் பாமன் தேவ்ரியா கிராமத்தில் உள்ள 38 பெண்களையும் குழந்தைகளையும் ஒரு பேருந்தில் ஏற்றிச்சென்றது . தகவல் அறிந்த காவல்துறையினர் விரட்டி சென்று அந்த பெண்களையும் குழந்தைகளையும் மீட்டனர்
இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 94 பேர் மீது எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டப்பகலில் அரங்கேறிய இந்த அதிர்ச்சியான சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது.
Comments