கன்னியாகுமரி: மிரட்டிய கேரள ஆட்டோ கொள்ளையர்கள்... பொறி வைத்தது தெரியாமல் தானாக வந்து சிக்கினர்!

கன்னியாகுமரி மாவட்டத்தை மிரட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ கொள்ளையர்கள் பிடிபட்டனர். மற்றோருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பளுகல் , தோலடி என்ற இடத்தில் பகவதியம்மா ( வயது 70 ) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது , ஆட்டோவில் வந்த 3 பேர் மூதாட்டியிடம் படுக்கை மெத்தை வேண்டுமா என்று கேட்டுள்ளனர். பகவதியம்மா வேண்டாம் என்று பதில் கூறியுள்ளார். இதையடுத்து, ஆட்டோவில் வந்தவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் கொண்டு வர பகவதியம்மா வீட்டுக்குள் சென்ற போது , ஆட்டோவில் இருந்த ஒருவன் பகவதியம்மாவின் பின்னாலேயே சென்று அவரின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து விட்டு வெளியே ஓடினான். பின்னர், மூவரும் ஆட்டோவில் தப்பி சென்றனர்.
பகவதியம்மா வின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பிடிக்க முயன்றும் கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, அருமனை அருகேயுள்ள தேவிகோடு பகுதியை சேர்ந்த வசந்த குமாரி என்பவர் முக்கூட்டுகல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது , ஆட்டோவில் வந்த 3 பேரும் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு ஓடி விட்டனர்.இது குறித்து அருமனை காவல் நிலையத்தில் வசந்த குமாரி புகார் அளித்தார்.
ஏற்கனவே பகவதியம்மா விடம் செயின் பறித்த வாலிபர்களின் அடையாளங்களுடன் ஒத்து போனது. எனவே இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டு இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது சந்தேகத்துக்குரிய வகையில் கேரளா பதிவு எண் கொண்ட ஒரு ஆட்டோ ஒன்று சுற்றி திரிவதை கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா மாநிலம் குந்நத்துகால் பகுதியை சேர்ந்த அனில் குமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து, குந்நத்துகால் பகுதிக்கு போலீசார் அனில் குமாரை தேடி சென்றனர். ஆனால், குறிப்பிடப்பட்ட முகவரியில் அனில் குமார் இல்லை. போலீஸார் தங்களை பொறி வைத்து தேடுவதை தெரியாமல் ஆட்டோ கொள்ளையர்கள் நேற்று வழக்கம் போல மீண்டும் தமிழக எல்லைக்குள் வந்தனர். அப்போது, அருமணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸாரிடத்தில் வசமாக சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக, சுதாரித்துக் கொண்ட போலீஸார் மடக்கி பிடித்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த அனில் குமார் மற்றும் கேரளா மாநிலம் இடிச்சக்கபிலாமூடு பகுதியை சேர்ந்த முகம்மது ஷாபி ஆகியோரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், காவல்நிலையம் கொண்டு வந்து தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு பெண்களிடமும் நகை பறிப்பில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக் கொண்டனர். கேரளா, தமிழக எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் கை வரிசை காட்டியிருப்பதும் தெரிய வந்தது. இவர்களின் கூட்டாளியான மற்றோருவரை போலீஸார் தேடி வருகின்றனர். வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments