நலமாக உள்ளார் ரஜினி... வீடு திரும்புவது குறித்து நாளை முடிவு...

நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்றும் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலா மருத்துவமனையில் நேற்று நடிகர் ரஜினி காந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவரது உடல் நிலை குறித்து எடுக்கப்பட்ட சில பரிசோதனை முடிவுகள் இன்று மாலையில் வந்துள்ளதாகவும், இதன் மூலம் உடல் நிலை சீராக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் சில மருத்துவ முடிவுகள் வர வேண்டியது உள்ளது என்றும், இந்த முடிவுகளின் அடிப்படையிலும், இன்றிரவு அவரது ரத்த அழுத்தம் குறித்து எடுக்கப்படும் பரிசோதனை அடிப்படையிலும் ரஜினி காந்த் வீடு திரும்புவது குறித்து நாளை காலையில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். ரஜினி விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவேன் என அவர் தெரிவித்ததாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
Comments