பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா.. புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் மாதிரிகள்

0 4415
பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள தொற்று புதிய வீரியமிக்க கொரோனா வைரஸா என கண்டறிய மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து டெல்லி வழியே சென்னை வந்த ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரைப் பாதித்திருப்பது, கொரோனாவின் வீரியமிக்க புதுவகையா என கண்டறிய, மாதிரிகள் புனே அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.

இங்கிலாந்தில் மரபியல் மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இங்கிலாந்தில் இருந்த எந்த நாடு வழியாகவும் சென்னை வரும் நபர்களை கட்டாயம் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய ரக கொரோனாவால் மக்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை என்றார். வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளதாகவும், கடந்த 10 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வந்த ஆயிரத்து 78 பேரை கண்டறிந்து, பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாத்தில் இருந்து டெல்லி வழியே சென்னை வந்த ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், புது வித மாற்றம் அடைந்த தொற்றாக இருக்குமோ என்று யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறினார். சம்மந்தப்பட்ட நபரின் சளி மற்றும் ரத்த மாதிரி புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அது எந்த வகை என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் வரும் அனைவரும், அவர்கள் எந்த நாடு வழியாக வந்தாலும் கட்டாயம் தனிமை படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை செயலர் கூறினார். இதனிடையே, நேற்று ஏர் இந்தியா விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்த பயணிகளில், லண்டன் நகரில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்தடைந்த 3 பெண்கள், 5 ஆண்கள் என 8 பேர் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, இன்று லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த 9 பயணிகளும், மணப்பாக்கம் தனிமை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments