தொடரும் கந்துவட்டி பிரச்சனை.. அரசுப் பள்ளி ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு!

0 9700

ராமநாதபுரத்தில் கந்து வட்டி தொல்லை காரணமாக அரசுப் பள்ளி தமிழாசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அடுத்துள்ள அக்காள் மடத்தைச் சேர்ந்தவர் பூமாரியப்பன். இவர் தங்கச்சிமடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தமிழாசிரியர் பூமாரியப்பன் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக அவ்வப்போது தனி நபர்களிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி வந்துள்ளார். இதனை சரியாக திருப்பிக் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று ஆசிரியர் பூமாரியப்பனைத் தேடி அவரின் வீட்டுக்கு இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. ஆசிரியரின் மனைவி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த இருவரும், அவரது மனைவியிடம், நாங்கள் ஆசிரியருக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாகவும், நாளைக்குள் வட்டியும் அசலும் சேர்த்து ரூ. 60 லட்சம் கொடுக்க வேண்டும் என தகராறு செய்துள்ளனர். அதோடு அப்பணத்தை வட்டியும் முதலுமாக தரவில்லையென்றால் அசிங்கமாகிவிடும் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மதியம் வீட்டுக்கு வந்த கணவரிடம் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் வந்தனர் என்றும், வட்டிக்கு வாங்கிய பணத்தை என்ன செய்தீர்கள் எனவும் அவரது மனைவி கேட்டுள்ளார். இதற்கு தமிழாசிரியார் சரியான பதில் சொல்லாமல் மழுப்பியதால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், மன வேதனையடைந்த பூமாரியப்பன் வீட்டின் பின்புறம் இருந்த குளியல் அறை அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு தங்கச்சிமடம் போலீசார் விரைந்தனர். தமிழாசிரியரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ‘மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அரசு சம்பளம் வாங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர், கந்துவட்டிக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது ஏன்?’ என விசாரணை செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments