சீரியல்களில் இனி நடிக்க கூடாது.. கெடுபிடியால் சித்ரா தற்கொலை..? சிறையிலடைக்கப்பட்ட ஹேம்நாத்..

0 8727
சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்‍.

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்‍. சக நடிகருடன் நெருக்கமாக நடித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து சீரியல்களில் இனி நடிக்க கூடாது என கணவர் வலியுறுத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்‍.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சித்ரா, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்ட நிலையில், கடந்த 9ந் தேதி சடலமாக மீட்கப்பட்டார்‍.

சித்ரா உடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்‍. அப்போது சித்ராவை காதலிக்கும் போது வராத சந்தேகம், பதிவுத்திருமணம் செய்தவுடன் ஹேமந்திற்கு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சீரியலில் நடிக்கும் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததை சொல்லிக்காட்டி, தொடர்ந்து மனரீதியாக சித்ராவை ஹேம்நாத் துன்புறுத்தியிருக்கிறார் என்றும், ஒருகட்டத்தில் சகநடிகர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்குமே அவர் கட்டுப்பாடு விதித்திருக்கிறார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் சக நடிகர்களுடன் டப்ஸ்மாஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடும் சித்ராவின் ஆர்வத்திற்கும் அவர் தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் நடிக்கவே வேண்டாம் என சித்ராவிற்கு ஹேம்நாத், உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தனது தாய் விஜயாவிடம், கூறி சித்ரா அழ, ஹேம்நாத்தை விட்டு வந்துவிடுமாறு கூறியதாகவும், ஆனால் திருமணமாகிவிட்டதால் அதற்கு சித்ரா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சித்ராவுடன் தகராறு செய்வதையும் ஹேம்நாத் வாடிக்கையாக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனால் ஏற்கனவே ஒரு முறை தூக்கமாத்திரை சாப்பிட்டு சித்ரா, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்கின்றனர் போலீசார்‍.

சம்பவத்தன்று, படப்பிடிப்பிலிருந்து சித்ராவை ஹோட்டலுக்கு காரில் அழைத்துவரும் போதே வாக்குவாதம் செய்ததுடன், தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று கடுமையான வார்த்தைகளால் ஹேம்நாத் திட்டியதாக கூறப்படுகிறது. உச்சக்கட்டமாக வேறு நடிகர்களுடன் தொடர்பு படுத்தி ஆபாசமாக பேசியதுடன், நீ செத்துத் தொலை என சொல்லிவிட்டு அறையிலிருந்து ஹேம்நாத் வெளியேறியதாக கூறப்படுகிறது.

ஆசை ஆசையாக காதலித்த காதலனிடமிருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்காத சித்ரா, விரக்தியின் உச்சத்திற்கு சென்று தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments