வாடகை தொண்டர்களுக்கு அல்வா கொடுத்த காங்கிரஸ்..! பிரியாணி ஓகே..! ரூ 250 எங்கப்பா ?

0 7004
வாடகை தொண்டர்களுக்கு அல்வா கொடுத்த காங்கிரஸ்..! பிரியாணி ஓகே..! ரூ 250 எங்கப்பா ?

காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட வாடகை தொண்டர்களுக்கு பேசியபடி பணம் கொடுக்காததால் அவர்கள் பேரியக்க நிர்வாகி ஒருவரை சிறைபிடித்தனர். 

ரன் படத்தில் 5 ரூபாய் கொடுத்து கட்சி கூட்டத்திற்கு கோஷம் போட தொண்டர்களை வாடகைக்கு அழைத்து செல்வது போல ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும் அதே பாணியில் சென்னை சேப்பாக்கத்தில் காங்கிரஸ் பேரியக்கம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொண்டர்கள் அழைத்து வரப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நின்ற மேடையின் முன்பு நின்று கோசம் எழுப்ப அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் திரும்பி நின்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து நீண்ட நேரமான பின்னரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து செல்லாமல் சாலையோரம் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் அவர்களிடம் ஏதோ கொடுக்க முயல பேசியபடி தர வேண்டும் என்று அவரை சூழந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர்.

கேமராவை பார்த்ததும் அங்கிருந்து நகர்ந்து நகர்ந்து அரைகிலோமீட்டர் தூரம் வரை அந்த நிர்வாகி விலகி செல்ல அவரை விடாமல் தொண்டர்கள் பின் தொடர்ந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட வாடகை தொண்டர்கள் என்பது தெரியவந்தது.

3 மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு பிரியாணி பொட்டலம், 250 ரூபாய் பேட்டா என்று பேசி வாட்ஸ் அப் மூலம் ஒருங்கிணைத்து பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களை வரவழைத்துள்ளனர். வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று அங்கு வந்த வாடகை தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலத்தை கொடுத்து விட்டு பணம் கொடுக்காமல் நழுவ, அழைத்து வந்த காங்கிரஸ் நிர்வாகி திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.

ஆனால் இளைஞர்கள் தங்களுக்குரிய ஆர்ப்பாட்ட வாடகையை பெறாமல் செல்வதில்லை என்று அடம்பிடித்ததால் வேறு வழியின்றி ஆளுக்கு 50 ரூபாய் கொடுத்து கூட்டத்தை கலைக்க பேச்சுவர்த்தை நடத்தியுள்ளனர். 3 பேர் கைமாறி பணம் வந்ததால் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கட்சியினரே கமிஷனாக எடுத்துக் கொண்டதாக வாடகை தொண்டர்கள் வேதனை தெரிவித்தனர்.

வாடகை சைக்கிள், வாடகை வீடு, வாடகை கார் வரிசையில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு வாடகை தொண்டர்களின் தேவை அதிகமாகவே இருக்கும் என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments