எல்லாரும் சூனா பானா ஆகமுடியுமாடா.? ஆடு களவாண்டு சிக்கிய நடிகர்

0 36045
எல்லாரும் சூனா பானா ஆகமுடியுமாடா.? ஆடு களவாண்டு சிக்கிய நடிகர்

சென்னையில் திரைப்படத் தயாரிப்பில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ஆடு திருட்டில் இறங்கிய "ஹீரோ அண்ணனும்" "தயாரிப்பாளர் தம்பியும்" போலீசில் சிக்கியுள்ளனர்.

பார்ப்பதற்கு பவர் ஸ்டாருக்கே டஃப் கொடுக்கும் ரேஞ்சில் இருக்கும் இவர்தான், நிரஞ்சன். “நீதான் ராஜா” என்ற இந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அத்தனை இலாகாவையும் கையிலெடுத்து, படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருப்பவர். இதே நிரஞ்சன் தான் தனது தம்பியோடு சென்று ஆடு திருடி தற்போது சிக்கிக் கொண்டவர்.

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பழனி என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவருடைய விலையுயர்ந்த ஆடுகளில் ஒன்று கடந்த மாதம் 9ஆம் தேதி காணாமல் போனதாக போலிசில் புகாரளித்துள்ளார். விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு ஆடு திருடர்கள் காரில் வந்து சென்றது மட்டும் முதலில் தெரியவந்தது. இதனையடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீசார் எதிர்பார்த்தபடியே சனிக்கிழமை மாலை மாதவரம் மஞ்சம்பாக்கம் ரிங் ரோடு அருகே இருவர் காரில் வந்து இறங்கி சாலையில் படுத்துக் கொண்டிருந்த ஆட்டை திருடுவதற்கு முயற்சித்துள்ளனர். அவர்களை லாவகமாக மடக்கி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இருவரும் புதுவண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் 2ஆவது தெருவைச் சேர்ந்த நிரஞ்சனும் அவரது சகோதரர் லெனின் குமாரும் என்பது தெரியவந்தது.

நிரஞ்சனின் தந்தை விஜயசங்கர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இளைய மகன் லெனின்குமார் பெயரில் படத் தயாரிப்பில் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. நீதான் ராஜா படத்துக்காக கடைசியாக செலவழித்த சுமார் ஒன்றரை கோடி ரூபாயும் லாபத்தைக் கொடுக்காமல் போகவே, அண்ணன் தம்பி இருவரும் ஆடு வியாபாரத்தில் இறங்கியுள்ளனர். அதில் விரைவாக சம்பாதிக்க, குறைவான விலைக்குக் கிடைக்கும் திருட்டு ஆடுகளை வாங்கி விற்று வந்துள்ளனர். பின்னர் ஆடு திருட்டில் நாமே இறங்கினால் என்ன என்ற யோசனை உதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, மாதவரம், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு கார் மற்றும் சிறியவகை சரக்கு வாகனம் ஒன்றை எடுத்துக் கொண்டு செல்லும் சகோதரர்கள் இருவரும், அங்கு ஆடுகள் மேய்ப்பவர்களிடம், படப்பிடிப்புக்கு இடம் பார்க்க வந்ததாகக் கூறி பேச்சு கொடுப்பார்கள்.

பின்னர் அவர்களது கவனத்தை திசை திருப்பி, ஒன்று முதல் 10 ஆடுகள் வரை என கிடைப்பதை திருடி வருவது வழக்கம் என்கின்றனர் போலீசார். தற்போதைய சூழலில் ஒரு குட்டி ஆடே 8 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளாக ஆடு திருட்டையே தங்களது அன்றாட தொழிலாக மாற்றி நிரஞ்சனும் லெனின்குமாரும் உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர் என்று கூறும் போலீசார், இருவரையும் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments