அமைச்சர் துரைக்கண்ணு உடல்.. அரசு மரியாதையுடன் அடக்கம்..!

0 4351
மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

பாபநாசம் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினரும் வேளாண்துறை அமைச்சருமான துரைக்கண்ணு, மூச்சுத் திணறல் காரணமாக அக்டோபர் 13 ஆம் நாள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காகச் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. நுரையீரல் 90 விழுக்காடு அளவுக்குப் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு காலமானார்.

துரைக்கண்ணு மறைவு குறித்துத் தகவலறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு தனக்கு வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் துரைக்கண்ணு உடல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள அவர் சொந்த ஊரான ராஜகிரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், அன்பழகன், சி.வி.சண்முகம், காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆகியோர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் வன்னியடியில் உள்ள துரைக்கண்ணுவின் தோட்டத்துக்கு அவரது உடல் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டது. இறுதிச் சடங்குகளுக்குப் பின் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், முழு உடல்கவசம் அணிந்த சுகாதாரத்துறைப் பணியாளர்கள், அவரது உடலை அடக்கம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் உள்ளிட்டோர், இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments