108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..! எஸ்.பி நடவடிக்கைக்கு பலன்

0 19275
108 வயது மூதாட்டிக்கு வீடு - நிலம் கிடைத்தது..! எஸ்.பி நடவடிக்கைக்கு பலன்

நிலம் மற்றும் வீட்டை பறித்துக் கொண்டு, மகனால் கைவிடப்பட்டு தவித்த, விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்த 108 வயது மூதாட்டிக்கும் அவரது 3 விதவை மகள்களுக்கும் வீடு மற்றும் நிலத்தில் உரிய பங்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொடுத்தார். காவல் துறை நினைத்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு சாட்சியான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்த 108 வயது மூதாட்டியான கிருஷ்ணவேணி அம்மாள் இவர் தனது 3 விதவை மகள்களுடன் 29 ந்தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தனது மகன் கணேசன், தனது பூர்வீக வீட்டையும் நிலத்தையும் அபகரித்துக் கொண்டு தன்னையும் தனது 3 மகள்களையும் வீதியில் நிறுத்தி விட்டதாக கூறியிருந்தார். இருக்க ஒரு குடிசை வீடு இருந்தாலே போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நிலஅபகரிப்பு புகாருக்குள்ளான மூதாட்டியின் மகன் கணேசனை வளவனூர் போலீசார் விசாரணைக்காக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். கணேசனிடம், அவரது தாய் மற்றும் சகோதரிகள் 3 பேரும் கணவனை இழந்து தவித்து வருவதை எடுத்துகூறி பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்பதையும், தாயின் அருமையையும் எடுத்துக்கூறிய காவல் காண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மனசாட்சியுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தினார்.

இதையடுத்து மனம் திருந்திய மூதாட்டியின் மகன் கணேசன் தனது பெயருக்கு மாற்றிய குடும்ப சொத்துக்களில் சம பங்கினை தனது சகோதரிகளுக்கு பிரித்து எழுதிக்கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அதன் படி வீடு மற்றும் நிலங்களை சமமாக பிரித்து எழுதி காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த சொத்து பத்திரங்களை 108 வயது மூதாட்டியின் வீடுதேடிச்சென்று காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார்.

மேலும் மூதாட்டிக்கு தேவையான மளிகை பொருட்களையும் அவர் வழங்கினார். 3 மகள்களும் அந்த மூதாட்டியை பராமரித்துக் கொள்வதாக உறுதி அளித்தனர். எந்த ஒரு மீடியா செய்தியாளர்களுக்கும் தெரிவிக்காமல் சக காவல் அதிகாரிகளுடன் சென்று காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இதனை செய்து வந்த நிலையில் அங்குள்ளவர்கள் செல்போனில் எடுத்த படங்கள் அவரை பாராட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

எது எப்படி இருந்தாலும் தமிழக காவல்துறை முழுமனது வைத்தால் போதும் எந்த ஒரு புகாருக்கும் உடனடி தீர்வு கிடைக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி, இதனை போலவே ஒவ்வொரு வழக்கினையும் தமிழக காவல்துறையினர் விரைந்து முடித்தால் அலைக்கழிக்கப்படும் புகார்தாரர்கள் காவல் துறையினரை போற்றிக் கொண்டாடுவர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments