“பப்ஜி” மூலம் பயங்கர திட்டம் .. தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்..!

0 8428
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறையில் இருந்தபடியே பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி கொலை திட்டத்தை அரங்கேற்றி வந்த ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் குண்டு வெடித்து காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறையில் இருந்தபடியே பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி கொலை திட்டத்தை அரங்கேற்றி வந்த ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் குண்டு வெடித்து காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மூன்று தினங்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் ரவுடிகளான அஷோக் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

நண்பர்களுடனான பார்ட்டிக்கு சென்று விட்டு போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து நிலை தடுமாறி விழுந்ததில் அவர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் இருவரும் காயம் அடைந்ததாக கூறப்படுகின்றது. சம்பவ இடத்தில் இருந்து பட்டாக்கத்திகள், மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

செங்கல்பட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி குள்ள சீனு கொலையில் தொடர்புடைய அஷோக்கை பழி தீர்க்கும் நோக்கோடு சீனுவின் கூட்டாளிகளில் ஒருவனான மொட்டை விக்கி என்பவன் சுற்றி வந்துள்ளான்.

இதற்கிடையே பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி அஷோக் சிறையில் இருந்தபோது திருட்டு தனமாக மறைத்து வைத்திருந்த செல்போனில் பப்ஜி விளையாட்டை விரும்பி விளையாடி வந்துள்ளான்.

இந்த பப்ஜி விளையாட்டு மூலம் முகம் தெரிந்த மற்றும் தெரியாத நபர்களுடன் எளிதாக உரையாட முடியும் என்பதால் ரவுடி மொட்டை விக்கியை கொலை செய்வதற்கான திட்டத்தை தனது கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு பப்ஜி விளையாட்டின் இந்த வசதியை அவன் பயன்படுத்தியுள்ளான்.

அதன்படி தனது கூட்டாளிகளான விக்னேஷ், வினோத், ஆகாஷ், சஞ்சய் ஆகியோருடன் சேர்ந்து பப்ஜி விளையாடியபடி கொலைத்திட்டத்தை பகிர்ந்துள்ளான். ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் மொட்டை விக்கியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து அசோக்கும் விக்னேஷும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில், பப்ஜி விளையாட்டு மூலம் கொலைத் திட்டம் தீட்டிய அவர்களது நண்பர்களான வினோத், ஆகாஷ், சஞ்சய் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். செல்போனில் நேரடியாக பேசினால் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்பதால் பப்ஜி விளையாட்டு உத்தியை அவர்கள் கையாண்டு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

அசோக் வீட்டில் நடத்திய சோதனையில், 4 வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து அவனது வீடு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கி வரும் ரவுடிகள் அட்டகாசம், வெடிகுண்டு கலாச்சாரம் உள்ளிட்டவற்றுக்கு போலீசார் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments