அதிமுக அரசை உரசிப் பார்க்க வேண்டாம் - H.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

0 3756
அதிமுக அரசு ஆண்மையுள்ள அரசு என்பதில் மாற்றுக் கருத்தில்லை - ஜெயக்குமார்

அதிமுக அரசு ஆண்மையுள்ள அரசு என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் தங்களை உரசிப் பார்க்க வேண்டாம் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எடியூரப்பா அரசு ஆண்மையுள்ள அரசு என்று ஹெச்.ராஜா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம் அதிமுக அரசை ஹெச்.ராஜா ஆண்மையற்ற அரசு என விமர்சித்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பிராட்வேயில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு ஆண்மையுள்ள அரசு என்று அனைவருக்கும் தெரியும் என்றார். ஒரு கருத்தை ட்விட்டரில் போட்டு விட்டு பிரச்சனை என்றதும் ஓடி ஒளியும் ஹெச்.ராஜா ஆண்மையுள்ளவரா என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

மேலும் பொதுவெளியில் கூறிய கருத்திற்காக உயர்நீதிமன்றம் சென்று மன்னிப்பு கோருவது ஆண்மையா என்றும் அவர் ஹெச்.ராஜாவை குறிப்பிட்டு வினவினார். அத்துடன், ஹெச்.ராஜாவின் ஆண்மை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

அதிமுக அரசை உரசிப்பார்ப்பதை ஹெச்.ராஜா நிறுத்திக் கொள்வது நல்லது என்றும் ஜெயக்குமார் எச்சரித்தார். மேலும் அமைச்சர்கள் ஜெயலலிதா பின்னால் சென்று ஒளிந்து கொள்பவர்கள் என பாஜக பிரமுகர்கள் சிலர் விமர்சித்தது பற்றி ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெயலலிதாவிற்காக போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்த தலைவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments