சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு... மகேந்திர சிங் தோனி அறிவிப்பு

0 12763
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற்றதாக அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுதந்திர தின நாளில், டோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 39 வயது மகேந்திரசிங் டோனி, கடந்த 16 ஆண்டுகளாக நட்சத்திர வீரராக ஜொலித்து வந்தார். 350 ஒரு நாள் போட்டிகள் - 90 டெஸ்ட் போட்டி களில் விளையாடி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள டோனிக்கு, நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தபோதிலும் தமிழக ரசிகர்கள், அவரை " தல " என அன்புடன்அழைத்து மகிழ்கிறார்கள்.

கடந்த 2019 ம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து க்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட பின், கடந்த ஓராண்டாக டோனி, எந்தவொரு போட்டிகளிலும் விளையாடவில்லை. ஏற்கனவே, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்று விட்டார்.

இந்த சூழலில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் டோனி, ஓய்வு பெறும் முடிவை, நாட்டின் 74ஆவது சுதந்திர தினநாளில், இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார்.

ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான தோனி, மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியவர். ஐ.சி.சி நடத்திய அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பைகளை வென்ற உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர், தோனி.

ஐக்கிய அரபு எமிரேட்டில் செப்டம்பர் 19 - ல் துவங்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில், சென்னை பயிற்சியில் ஈடுபட்டுள்ள டோனியின் ஓய்வு அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments