36 வயதில் ஐ.சி.சி. எலைட் நடுவர் குழுவில் இந்தியர் ; யார் இந்த நிதின் மேனன்?

0 2567

.சி.சி. எலைட் நடுவர்கள் குழுவில் 36 வயது நிதின் மேனன் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் நிகெல் லியாங்குக்கு பதிலாக இவர், எலைட் நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரததேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த நிதினின் தந்தை நரேந்திர மேனனும் கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றியவர். நிதின் மேனன் 3 டெஸ்ட் 24 ஒருநாள் மற்றும் 16 டி- 20 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன், மற்றும் சுந்தரம் ரவி ஆகியோருக்குப் பிறகு எலைட் நடுவர்கள் குழுவில் இணையும் மூன்றாவது இந்தியர் இவர். ஐ.சி.சி பொதுமேலாளர் ஜெஃப் அலார்டைஸ், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரஞ்சன் மதுகுலே, டேவிட் பூன் உள்ளிட்ட தேர்வுக்குழுவினர் நிதின் மேனனை எலைட் குழுவில் சேர்த்தனர்.

நிதின் மேனன் கூறுகையில், ''எலைட் குழுவில் என் பெயர் இடம் பெற்றது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை மற்றும் பாக்கியமாகக் கருதுகிறேன். உலகின் முன்னணி நடுவர்களுடன் பணியாற்ற வேண்டுமென்பது என் கனவு. அது இப்போது நிறைவேறியுள்ளது. ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி - 20 உள்ளிட்ட ஐ.சி.சி போட்டிகளிலும பணியாற்றிய அனுபவத்துடன் இந்தப் புதிய பணியை திறம்பட செய்வேன். எனக்கு வந்துள்ள பொறுப்பை நான் புரிந்துகொள்கிறேன். எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியானதை செய்கிறேன். இந்திய நடுவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் பொறுப்பும் எனக்கு ஏற்பட்டுள்ளது. என் அனுபவங்களைப் பகிர்ந்து இந்திய நடுவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவேன். மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி அமைப்புகள் எனக்கு அளித்து வந்த ஆதரவு மற்றும் எனது திறமையை நம்பியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் களத்தில் இந்திய நடுவர்களின் திறமை கேள்விக்குரியதாகவும் விமர்சிக்கத்தக்கதாகவும் இருந்தது. ஆனால், இந்த காலக்கட்டத்திலும் நிதின் மேனனின் திறமை எந்த விமர்சனமும் இல்லாமல் பளீச்சிட்டது. இதனால், ஐ.சி.சி. இந்த கௌரவத்தை அவருக்கு அளித்துள்ளது. 2021- ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் இவர் நடுவராகப் பணியாற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் போது 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றவும் நிதின் மேனன் தகுதி பெற்றுள்ளார்.

1983- ம் ஆண்டு பிறந்த நிதின் மேனன், மத்தியப் பிரதேச 'ஏ ' அணிக்காக விளையாடியவர். 13 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய பிறகு , 2015-ம் ஆண்டு ரஞ்சி டிராபியில் நடுவராகப் பணியாற்றினார். 2017- ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிக்ளுக்கிடையேயான டி -20 போட்டியில் முதன்முதலாக சர்வதேச நடுவராக பணியாற்றினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments