காவல்நிலைய விசாரணையின் போது போலீசார் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

0 12806

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் காவல்துறையினர் சித்திரவதை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் குமரேசனின் உடல் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் குமரேசன் மீது செந்தில் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மே மாதம் 8, 10 ஆகிய தேதிகளில் விசாரணைக்குச் சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் கடுமையாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. வெளியில் சொன்னால் குமரேசனின் தந்தையையும் அடிப்போம் என மிரட்டியதால் குமரேசன் யாரிடமும் சொல்லவில்லை.

இந்நிலையில் ஜூன் 10 அன்று குமரேசன் ரத்தம் கக்கியதால் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஜூன் 12 அன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்த சித்திரவதைகளைக் குமரேசன் மருத்துவரிடம் கூறியுள்ளார். கடுமையான தாக்குதலால் குமரேசனுக்குக் கல்லீரலும், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தந்தையிடம் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீரகேரளம்புதூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரித் தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

இதனிடையே 16 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்களும் பொதுமக்களும் வீரகேரளம்புதூர் காவல் நிலையம் அருகில் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முந்நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். குமரேசன் உயிரிழப்பைக் கண்டித்துக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதையடுத்து, குமரேசனின் சந்தேக மரணத்திற்கு காரணமானவர்கள் எனக் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், காவலர் குமார் ஆகியோர் மீது வீரகேரளம்புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிறு மாலை குமரேசனின் உடல் பலத்த பாதுகாப்புடன் வீரகேரளம்புதூருக்குக் கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தியபின் அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments