வெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண்டுபிடிப்பு..!

0 7350

நாடு முழுவதும் விவசாயிகளை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகளை விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் அழிக்கும் வகையில் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரம் ஒன்றை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். 

திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வரும் உதயகுமார் என்ற மாணவர், மின்சாரத்தால் இயங்கும் "லோக்கஸ்ட் இ கில்லர்” ( LOCUST e KILLER ) என்ற இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். எளம்பிள்ளை அருகேயுள்ள பெருமாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த உதயகுமாரின் இந்த கண்டுபிடிப்பு இரும்பு கூண்டு போன்ற வடிவில் காணப்படுகிறது.

இயந்திரத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கைச் சுற்றிலும் இரண்டு அடுக்குகளாக வெட்டுக்கிளிகள் நுழையும் அளவுக்கு இடைவெளியுடன் இரும்பு வலைகளை பொருத்தியுள்ளார். இந்த இரும்பு வலைகளில் மனித உடலை தாக்காத வகையில் மாற்றம் செய்யப்பட்ட மின்சாரம் பாய்ந்துகொண்டு இருக்கும். அதாவது இயல்பாக மனித உடலைத் தாக்கும் 230 வோல்ட் மாறுதிசை மின்னோட்டமானது ( alternating current ) சாதனம் ஒன்றின் மூலம் மனித உடலை தாக்காத வண்ணம் 48 வோல்ட்டாக குறைக்கப்படுகிறது.

பூச்சிகள் இவற்றில் சிக்கும்போது இறந்துபோகும். மேலும் இயல்பாகவே விளக்கொளியைப் பார்த்து வரும் வெட்டுக்கிளிகள் இந்த இரும்புக் கூண்டை கடந்து செல்ல முற்படும்போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் என்கிறார் உதயகுமார். வினாடிக்கு 100 வெட்டுக்கிளிகள் வரை இந்த இயந்திரம் கொல்லும் என்று கூறும் அவர், 4 நாட்களில் 17 கோடி வெட்டுக் கிளிகள் வரை அது கொல்லும் என்கிறார்.

வெட்டுக்கிளிகளைக் கொல்ல ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பயிர்கள் நாசமாகும் என்று கூறும் உதயகுமார், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத, அதே சமயம் குறைந்த அளவே மின்சார நுகர்வு கொண்ட தனது கண்டுபிடிப்பின் மூலம் விரைவாகவும் அதிகளவிலும் பாதிப்பில்லாமலும் வெட்டுக்கிளிகளை கொல்லலாம் என்கிறார்.

அப்படி கொல்லப்படும் வெட்டுக்கிளிகளை நிலத்துக்கு அடியுரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உதயகுமார் கூறுகிறார் இந்த சாதனத்தை உரிய ஆய்வு செய்து, அது வெட்டுக்கிளிகளை கொல்வது உறுதியானால் அதிகாரிகள் இந்த இளைஞரை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments