பூனையை தூக்கிட்டு போலீசில் சிக்கிய.. டிக்டாக் எலி..! லைக் பைத்தியங்கள்

0 9037

டிக்டாக்கில் லைக்குகளை அள்ள வேண்டும் என்று வீட்டில் வளர்த்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு கெத்தாக வீடியோ பதிவிட்ட இளைஞரை, போலீசார் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் கொத்தாக கைது செய்து அழைத்து சென்றனர். வடக்கில் இருந்து பரவி வரும் குரூர டிக்டாக் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கைக்கு வளவி போட்டவா ? காலுக்கு கொலுசு மாட்டவா ? என்று டிக்டாக்கில் லாவணிபாடிய இந்த விடலை பருவ விபரீத இளைஞர் தான் பூனையை தூக்கு மாட்டி தொங்கவிட்ட செட்டிக்குளம் தங்க ராஜ்..!

ஆரம்பத்தில் மின்மினிய புடிச்சி விளக்கா ஏத்தட்டுமான்னு லவ் டூயட்டெல்லாம் டிக்டாக்கில் போட்டு பார்த்தார் தங்கராஜ்... லைக் கிடைக்கவில்லை..!

அடுத்து வெட்கத்தை விட்டு சேலையில வீடு கட்டவா ? என்று டூயட் பாடியும் டிக்டாக்கில் எவரும் இந்த குட்டி விஷாலை சீண்டவில்லை

டிக்டாக்கில் பெண்கள் ஐடியாக தேடி பார்த்து அவர்களின் ஆட்டத்துக்கு அசையாமல் நடக்கும் ராஜ்கிரன் போல டூயட் போட்ட போதும் எதற்கும் பிரயோசனப்படாத அந்த லைக் கிடைக்கவில்லை.

இதனால் சிறுமிகளை கூட விட்டு வைக்காமல் காதல் டூயட் பாட தொடங்கினார் தங்கராஜ்.

டூயட் ஆடியும், பாடியும் களைத்து போன அவருக்கு விபரீத எண்ணம் தோன்றியது...

பூனையை உயிரோடு தூக்கில் தொங்கவிட்டு டிக்டாக் எடுத்தால் லைக்குகள் குவியும் என்று நம்பி, தனது வீட்டில் சுற்றி திரிந்த குட்டிப் பூனை ஒன்றை பிடித்து அதன் கழுத்தில் நைலான் கயிற்றால் சுருக்கு மாட்டி அதனை தூக்கிட்டு கொன்று அதனுடன் இருப்பது போன்று கெத்தாக டிக்டாக்கில் பதிவிட்டார் தங்கராஜ்

அவர் போட்ட அந்த பதிவுக்கு லைக் வந்துச்சோ இல்லையே போலீஸ் அவரது வீடுதேடி வந்தது..!

கொரோனாவுல சிக்கி ஆஸ்பத்திரிக்கு போனா என்ன பன்னுவ ? என்று ஒரு வாரத்துக்கு முன்பு டிக்டாக்கில் பதிவு போட்ட தங்கராஜின் முகராசி தற்போது போலீசில் சிக்கி ஜெயிலுக்கு சென்றிருக்கிறார்

தங்கராஜின் தந்தை மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார், வாயில்லா ஜீவன்கள் தான் இவரது குடும்பத்திற்கே பால் கொடுத்து படி அளந்து கொண்டிருக்கிறது. இதை மறந்து வாயில்லா ஜீவனான பூனையை தூக்கிட்டு கெத்தாக வீடியோ பதிவிட்ட இந்த டிக்டாக் எலி தங்கராஜை கொத்தாக தூக்கிய போலீஸ் மிருகவதை தடை சட்டத்தில் கம்பி எண்ண வைத்திருக்கின்றனர்.

இந்த விபரீத குரூர கலாச்சாரம் வடக்கில் இருந்து டிக்டாக் மூலம் பரவி வருகின்றது. காதலை நிராகரிக்கும் பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்து கெத்து காட்டுவது போல பைசல் சித்திக் என்பவன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டதால் எழுந்த விமர்சனத்தால் டிக்டாக்கின் ரேட்டிங் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. இதையடுத்து அவனது கணக்கை டிக்டாக் நீக்கியது.

அதே பாணியில் தற்போது தமிழகத்தில் மிருகங்களை துன்புறுத்தி கொல்வதையும், வேட்டையாடுவதையும் பெருமையாக நினைத்து வீடியோவாக பதிவிட தொடங்கி இருப்பது விபரீதத்தின் தொடக்கம் என்பதை உணர்ந்து டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை மீண்டும் எழ தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments