மிகக்கடும் புயலான அம்பன் கடும் புயலாக வலுவிழந்தது தீவிர புயலாக கரையைக் கடக்கும் என தகவல்

0 6115
மிகக்கடும் புயலாக மையம் கொண்டிருந்த அம்பன் புயல், காலை 11 மணி நிலவரப்படி சற்றே வலுவிழந்து கடும் புயலாக உருமாறியுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.

மிகக்கடும் புயலாக மையம் கொண்டிருந்த அம்பன் புயல், காலை 11 மணி நிலவரப்படி சற்றே வலுவிழந்து கடும் புயலாக உருமாறியுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சூப்பர் சைக்ளோன் எனும் மிகக் கடும் புயலாக நிலை கொண்டிருந்த அம்பன் புயல் இன்று காலை 11 மணி நிலவரப்படி சற்றே வலுவிழந்து கடும் புயலாக உருமாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் கொல்கத்தாவிற்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் சுமார் 690 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது என்றும், மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்க கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவிலோ தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இன்று மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 200 முதல் 250 கிலோ மீட்டர் வரையிலும், இடையிடையே 230 கிலோ மீட்டர் வரையிலும் கடும் சூறாவளிகாற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 20ம் தேதி வடக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வரையிலும் இடையிடையே 185 கிலோமீட்டர் வரையிலும் கடும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், இந்த காலகட்டங்களில் கடல் மிக சீற்றத்துடன் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பன் புயல் கரையை கடக்க 24 மணி நேரமே உள்ள நிலையில்,  தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு உடனே மாற்றுமாறும்,  அத்தியாவசியப் பொருள்களை போதிய அளவில் இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அம்பன் புயல் தொடர்பாக கேபினட் செயலாளர் ராஜிவ் கவுபா தலைமையில் தேசிய நெருக்கடி நிர்வாக குழுவின் 3 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் அம்பனை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதனிடையே  புயல் தாக்கும் ஆபத்து உள்ள இடங்களில் வசிப்பவர்களை 1000 க்கும் மேற்பட்ட முகாம்களுக்கு மாற்றும் பணியில் ஒடிசாவும், மேற்கு வங்கமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதைப் போன்று பல இடங்களில் அமைக்கப்பட்ட கொரோனா குவாரன்டைன் கட்டிடங்களும் புயல் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதனால் தெற்கு வங்ககடல் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பன் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments