நள்ளிரவில் அரங்கேறிய கொடூரக் கொலை..!

0 11778

நாமக்கல் அருகே வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்ததோடு சொத்தையும் எழுதிக் கேட்டதால் கட்டிடத் தொழிலாளி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததாக அவரது மனைவி, மகள், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாமக்கல் புதன்சந்தையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான கந்தசாமி வியாழக்கிழமை இரவு அவரது வீட்டுக்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி பற்றவைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

அலறித் துடித்த கந்தசாமியை மீட்டு அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தி, மாமியார் எல்லம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்தே அவரை கொலை செய்தது அருகிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது.

கட்டிடத் தொழிலாளியான கந்தசாமி தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளியான சேலத்தைச் சேர்ந்த சரோஜா என்பவரோடு தவறான உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை தட்டிக்கேட்டதால் தங்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சித்ததாகவும் அங்கம்மாள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் தங்களுக்குச் சொந்தமான சொத்தை சரோஜா பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டு விரட்டப் பார்த்ததாகவும் அதனாலேயே அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அங்கம்மாள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று காலை மகளுடன் தாய் வீட்டுக்கு செல்வதாக அக்கம்பக்கத்தினருக்குத் தெரியும் வகையில் கூறிச் சென்றுவிட்டு, நள்ளிரவில் தாயுடன் ஊர் திரும்பி கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்றதாக அங்கம்மாள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகக் கூறும் போலீசார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

கணவனின் தவறான தொடர்பைக் கூட மன்னிக்கத் தயாராக இருந்த அங்கம்மாளுக்கு, சொத்தும் பறிபோய்விடுமோ என்ற பயம் மேலோங்கி இருக்கிறது. அந்த பயத்தின் நீட்சியே இந்தக் கொலை என்று கூறுகின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments