கடல் கடந்து வந்த காதல் பறவை..! முகநூல் காதலனுடன் சிக்கியது

0 4573

முகநூல் காதலனை தேடி இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னை பறந்து வந்த இளம்பெண்ணை காதலனின் வீட்டில் இருந்து காவல்துறையினர் மீட்டனர்.

கடல் கடந்து வந்த முகநூல் காதலுக்கு, பெற்ற கடனால் நேர்ந்த சிக்கல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

இலங்கையின் ரத்தினபுரா மாவட்டத்தில் இருந்து முகநூல் காதலனை தேடி சென்னைக்கு பறந்து வந்த காதல் பறவை ரிஸ்வி பாத்திமா குஷ்தா இவர்தான்.. பாத்திமாவின் தந்தை ஜெயினுல் ஆப்தீன் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்த பாத்திமா முகநூலில் மூழ்கியதால் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்துள்ளார். அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வி ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த முகமது முபாரக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முகமது முபாரக்கின் மயக்கும் வார்த்தை ஜாலத்தில் இதயத்தை பறிகொடுத்த பாத்திமா அவரை காதலிக்கத் தொடங்கினார். அடுத்த சில நாட்களிலேயே செல்போன் நம்பர்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு மணிக் கணக்கில் பேச தொடங்கி உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலனை சந்திக்கும் ஆவலில் பாத்திமா சென்னைக்கு விமானம் ஏறி வந்ததாக கூறப்படுகின்றது. காதலன் முகமது முபாரக்கை சந்தித்த பின் அவரது திட்டப்படி இருவரும் சென்னையில் இருந்து காதலனின் சொந்த ஊரான வி.ஆண்டிகுப்பத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

தனது மகளின் கடல் கடந்த காதல் விவகாரம் தெரிந்து அதிர்ந்து போன பாத்திமாவின் தந்தை ஜெயினுல் ஆப்தின் துபாயில் இருந்து சென்னை வந்தார். பண்ருட்டி தமுமுக நகர செயலாளர் அலாவுதீன் மூலம் தனது மகள் காதலனுடன் சொந்த ஊரில் இருப்பதை அறிந்த அவர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்விடம் உதவி கோரினார்.

கடந்த 26 ந்தேதி சுற்றுலா விசாவில் வந்த தனது மகளை காதல் ஆசைகாட்டி முகமது முபாராக் வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரிக்கச் சென்றபோது காதல் ஜோடி அங்கிருந்து தலைமறைவானது.

இதையடுத்து முகமது முபாரக்கின் செல்போன் நம்பரை வைத்து சென்னையில் தனியாக வீடு எடுத்து காதலனுடன் தங்கி இருந்த பாத்திமாவை காவல்துறையினர் மீட்டு அழைத்து சென்றனர்.

சம்பந்தப்பட்ட பெண் மேஜராக இருந்தாலும், அவர் சுற்றுலா விசாவில் வந்திருப்பதால் குறைந்த பட்சம் 15 நாளில் இருந்து அதிகபட்சமாக 3 மாதங்கள் மட்டுமே இங்கு தங்க முடியும் என்ற விதி இருப்பதால் தந்தையுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா ? அல்லது காதலனுடன் இங்கேயே தங்குவதற்கு அனுமதி அளிப்பதா ? என்பது தெரியாமல் காவல்துறையினர் குழம்பி உள்ளனர். ஆனால், தனது மகளை இலங்கைக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்பதில் பெற்ற கடனுக்காக தந்தை உறுதியாக உள்ளார்.வழக்கமாக முகநூல் காதல்..., காதலர்களில் ஒருவரை தான் முச்சந்தியில் நிறுத்தும் , ஆனால் பாத்திமா விவகாரத்தில் காதலியின் தந்தையை தவிக்கவிட்டுள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments