இந்தியாவில் 62 ஆக அதிகரித்த கொரானா தொற்று..!

0 7366

இந்தியாவில் நேற்று 18 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடக மாநிலங்களில் புதிதாக சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், இந்தியாவில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் 15 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், 1400 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவசர நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து திரையங்குகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவசம் போர்டு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 58 இந்தியர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி உடல் நலத்தை மருத்துவ நிபுணர்கள் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் நேற்று கோவிட்-19 நோய்த் தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து மத்திய அரசு சில புதிய உத்தரவுகளை அறிவித்துள்ளது.

பிரான்ஸ் , ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஏற்கனவே விசா வழங்கப்பட்டுள்ளவர்கள் இன்று இரவுக்குள் இந்தியாவுக்கு வராவிட்டால் அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனா, ஹாங்-காங், தென்கொரியா, ஜப்பான், இத்தாலி , தாய்லாந்து, சிங்கப்பூர் ,ஈரான், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவரும் தாமாக 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கப்பல்களுக்கு இந்தியாவின் துறைமுகத்திற்கு வர அனுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உடைய எந்த ஒரு கப்பலும் எந்த இந்திய துறைமுகத்திலும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்ட பின்னரே கப்பல்கள் துறைமுகத்தில் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments