குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்

0 5649

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 59. பேரணாம்பட்டைச்சேர்ந்த இவர் 1980 ஆம் ஆண்டு திமுகவின் அடிப்படை உறுப்பினராகி நகர ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளராகவும், மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்தார்.

2011முதல் 2016 ம் ஆண்டு வரை பேரணாம்பட்டு நகராட்சி தலைவராக பதவி வகித்த அவர், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற குடியாத்தம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

திருமணம் செய்துகொள்ளாத காத்தவராயன் இதய கோளாறு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு இம்மாத தொடக்கத்தில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் அவர் உடல் நிலை முன்னேற்றம் அடையாமல் இன்றுகாலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருவெற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கேபிபி சாமி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் மற்றொரு திமுக எம்எல்ஏவான காத்தவராயன் இன்று உரிழந்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் 2 திமுக எம்எல்ஏக்கள் உயிரிழந்திருப்பது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காத்தவராயன் உடல் இன்று மதியம் 12 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பேரணாம்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தொகுதி மக்கள் அஞ்சலிக்கு பிறகு நாளை இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

எம் எல் ஏ காத்தவராயன் மறைவுக்கு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவரது மறைவு தகவல் அறிந்து அதிர்ச்சியும், துக்கமும் அடைந்ததாகவும், இது குடியாத்தம் தொகுதி மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ள ஆளுனர், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments