2021 மார்சில், நிகர கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்... தமிழக பட்ஜெட்டில் தகவல்

0 392

வரும் நிதியாண்டு முடிவில், நிகர கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இது மாநில ஜிடிபியில் 21.83 சதவீதம் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகள் தொடர்ச்சியாக அதிக அளவில் வருவாயை ஈட்டித் தருகின்றன. பட்ஜெட்டில் வணிக வரிகளின் ஒட்டுமொத்த வசூல் தொகை 1,02,236 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஆயத்தீர்வையிலிருந்து கிடைக்கும் வருவாய் 8,133 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன வரி வருவாய் 6,897 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முத்திரைத் தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாய் மீண்டும் வளர்ச்சி அடையும் என பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஒட்டுமொத்த தொகை 14,435 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசின் சொந்த வரி வருவாய் மீதான மொத்த வரவினங்கள் 1,33,530 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் வரியல்லாத வருவாய் வரவினங்கள் 15,898 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. வரி மற்றும் வரி அல்லாத இனங்களின் மூலம் மாநிலத்தின் சொந்த வருவாய், 1,49,429 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து பங்கிடப்பட்ட வரிகள் மற்றும் உதவி மானியத்தின் மூலம் 69,946 கோடி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறைக்கு நிதி வழங்கும் வகையில், அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் அளவான 62,757 கோடி ரூபாயில், நிகர கடன் தொகையாக 59,209 கோடி ரூபாய் திரட்டப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே 2021ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் நிலுவையில் உள்ள நிகரக் கடன் 4,56,600 கோடி ரூபாயாகவும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 21.83 சதவீதமாக, 25 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments