மாணவியை கடத்திய காரை 40 கிமீ வேகத்தில் விரட்டிய போலீசார்.. சாவகாசமாக தப்பிய காதல் ஜோடி..! சினிமாவை மிஞ்சும் சிரிப்பு போலீஸ் காட்சிகள்

0 5270

சங்கரன்கோவில் அருகே காரில் பெண்ணை கடத்திச்செல்வதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் பைக்கில் மெதுவாக காரை விரட்டிச்சென்று மடக்குவதற்குள்,இளைஞர் அந்த பெண்ணுடன் தப்பி ஓடி விட்டதால், போலீசார் காரை பறிமுதல் செய்து ஓட்டுனரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவியை கடத்திச்செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட காரை சாவகாசமாக விரட்டிச்செல்லும் காமெடி காட்சிகள் தான் இவை..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆண்டார்குளத்தை சேர்ந்தவர் சாத்தையா இவரது மகள் கௌரி. கல்லூரி மாணவியான கவுரியை அதே ஊரைச்சேர்ந்த மனோஜ்குமார் காரில் கடத்திச்செல்வதாக கார் எண்ணுடன் தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வகன சோதனையில் ஈடுபட்ட சங்கரன் கோவில் போலீசார் சம்பந்தப்பட்ட கார் மறித்தனர், அந்த கார் நிற்காமல் சென்றதால் பைக்கில் விரட்ட தொடங்கினர்

பிக்கப் இல்லாத அந்த கார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அந்த காரை விரட்டிச்சென்ற காவலர்கள், 40 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்குகளில் சாவகாசமாக பின் தொடர்ந்து சென்றனர்.

போலீசாருக்கு போக்கு காட்டிய கார் ஓட்டுனர் வளைவு ஒன்றில் காரை நிறுத்தி மனோஜ்குமார் மற்றும் கவுரியை இறக்கிவிட்ட பின்னர் மெதுவாக சென்றார். ஒருவழியாக அந்த காரை மடக்கிப்ப்பிடித்த போலீசார் காருக்குள் எவரும் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்

கார் ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது, கவுரி கடத்தப்படவில்லை என்பதும் மனோஜ்குமாரும், கவுரியும் காதலர்கள் என்றும் ஓட்டுனர் போலீசில் தெரிவித்தார். பள்ளியில் படிக்கும் போதே கவுரியை காதலித்து அழைத்துச்சென்று திருமணம் செய்த சம்பவத்தில் மனோஜ்குமார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது கவுரிக்கு 18 வயது பூர்த்தியானதால், மீண்டும் அழைத்துச்சென்றதாக ஓட்டுனர் தெரிவித்தார். இதையடுத்து இளம் பெண்ணை தேடுவதை போலீசார் கைவிட்டனர்

போலீசார் மறித்தும் நிற்காமல் போக்கு காட்டியதால் காரை பறிமுதல் செய்ததோடு ஓட்டுநரையும் விசாரணைக்காக தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் போலீசார் செய்த இந்த சிரிப்பு சேஷிங் சம்பவத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments