ஓரம் போ.. ஓரம் போ... சண்டியரு வண்டி வருது.. வந்தனம் செய்த பப்ளிக்..! சவுண்டு விட்ட ராஜாவுக்கு தர்ம அடி
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உச்சி வெயிலில் போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை மறித்து கலாட்டாவில் ஈடுபட்ட குடிகார சண்டியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஓரம்போ... ஓரம் போ என்று சாலையில் செல்லும் வாகனங்களை தாக்கி வம்பு செய்த மடக்குடி சண்டியர் ராஜா இவர் தான்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலைய சாலையில் ஸ்டெடியாக நிற்க முடியாமல், வேட்டியை ஏத்திக் கட்டிக்கொண்டு உச்ச போதையில் தள்ளாட்டம் போட்ட இளைஞர் ,அந்தவழியாக வந்த ஆம்புலன்ஸை மறித்தபடி நடந்து சென்றார்.
சிறிது தூரம் கடந்ததும் ஆம்புலன்ஸை செல்ல அனுமதித்த அந்த குடிகார சண்டியர், தனியார் பேருந்து ஒன்றை மறித்து அதன் மீது சாய்ந்து கொண்டார்.
பின்னர் அந்த வழியாக வந்த நூற்பாலை வாகனங்கள் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி கையால் தட்டி கலாட்டாவில் ஈடுபட்டார்.
பேருந்து நிலையத்திற்குள் சென்று பெண்களிடமும், மாணவர்களிடமும் வம்பு செய்த நிலையில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தனர். பேண்டு சட்டை போட்ட தாத்தா ஒருவர் மட்டும் தைரியமாக அந்த குடிகார இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அதன் பின்னர் வழக்கம் போல வேடிக்கை பார்த்த பொதுமக்கள் மொத்தமாக சூழ்ந்து கொண்டனர்.
அவனை ரோந்து காவலரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஏற்றி காவல் நிலையம் அனுப்பி வைத்த போது குடிகார இளைஞர் பின்னால் திரும்பி டேய் என்று சவுண்ட் விட்டார்... அடுத்த நொடி அடைமழையாய் விழுந்தது அடிமழை.
ஆளுக்கு நாளு ரெண்டு தட்டு தட்டி குடிகார சண்டியரை காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தாராபுரத்தில் உள்ள கடையில் வேலைபார்த்து வந்த 19 வயது இளைஞரான ராஜா என்பதும் சொந்த ஊருக்கு திரும்பிய மகிழ்ச்சியில் மூக்கு முட்ட மது குடித்து விட்டு வம்பு செய்து வாங்கிக் கட்டிக் கொண்டதும் தெரியவந்தது. மதுவின் மயக்கத்தால் இளைஞர்கள் குடித்து சீரழிவதாக அவரை பிடித்துக் கொடுத்த தாத்தா வேதனை தெரிவித்தார்.
Comments