நாடக காதல் விபரீதம்... சொத்துக்காக தந்தையை கொன்ற வளர்ப்பு மகள்..! காதலுக்காக ஓடி பறந்த கிளி… சிறை பறவையானது!

0 7216
நாடக காதல் விபரீதம்... சொத்துக்காக தந்தையை கொன்ற வளர்ப்பு மகள்..! காதலுக்காக ஓடி பறந்த கிளி… சிறை பறவையானது!

மதுரையில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், சொத்துக்காக காதல் கணவனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்து வீட்டில் இருந்து நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த பைனான்ஸியர் கிருஷ்ணாராம் , இவரது மனைவி பங்கஜவள்ளி. இவர்கள் அதே அப்பகுதியில் கடைகளை கட்டியும் மாத வாடகைக்கு விட்டு வருவதால் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் வந்துள்ளது.

இந்த நிலையில் திங்கட்கிழமை மதியம் தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் கணவர் கிருஷ்ணராம் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பங்கஜவள்ளி , காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணாராம் அணிந்திருந்த 9 பவுன் தங்க செயின், மோதிரங்கள் மற்றும் பீரோவில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. வீட்டின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் கிருஷ்ணாராமின் வளர்ப்பு மகள் நிவேதா அவரது காதல் கணவர் ஹரிஹரன் உள்ளிட்ட 3 பேர் வீட்டுக்குள் வந்துவிட்டு வேகமாக வெளியேறிச்சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து நிவேதாவின் செல்போனை வைத்து காரைக்குடியில் பதுங்கியிருந்த அவர்களை சுற்றிவளைத்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

கிருஷ்ணாராம் - பங்கஜவள்ளி தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாததால், கொடைக்கானலில் இருந்து நிவேதாவை குழந்தையாக தந்து எடுத்தாலும், தான் பெற்ற மகளாக பாசம் காட்டி வளர்த்து வந்துள்ளார் கிருஷ்ணாராம். திருமண வயது வந்ததும் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் பார்த்து வந்த நிலையில், கல்லூரி சென்ற போது பழக்கமான ஆட்டோ ஓட்டுனர் ஹரிஹரன் என்பவருடன் நிவேதாவுக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால், ஹரிஹரன், ஓட்டல்களிலும் எடுபிடி வேலை பார்த்து வந்திருக்கிறான். இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும், ஆத்திரம் அடைந்த கிருஷ்ணாராம், தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தன்னை வளர்த்த தந்தையின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறிய நிவேதா, ஆட்டோ ஓட்டுனர் ஹரிஹரனை திருமணம் செய்துகொண்டுள்ளார். மனைவியின் சொத்துக்காக அவரை காதல் வலையில் வீழ்த்திய ஹரிஹரனோ, சில மாதங்களிலேயே தந்தையிடம் சொத்துக்களை வாங்கி வரச்சொல்ல, தந்தை கிருஷ்ணாராமை தொடர்பு கொண்டு சொத்து குறித்து கேட்டுள்ளார் நிவேதா. தன் பேச்சை கேட்காமல் எப்போது வீட்டை விட்டு சென்றாயோ , அப்போதே நீ எனக்கு மகள் இல்லை , அதனால் உனக்கு சொத்தும் இல்லை என்று கராறாக கூறி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணாராமின் வீட்டுக்கு காதல் கணவன் ஹரிகரனை அழைத்து சென்ற நிவேதா சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துள்ளார். தங்களுக்கு உதவியாக கார்த்திக் என்பவனையும் உடன் அழைத்து சென்றுள்ளனர். வீட்டை விட்டு ஓடிய மகளை நேரில் கண்டதும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணாராம், சொத்தில் ஒரு பைசா கூட தர மாட்டேன், அனைத்தையும் கோவிலுக்கு எழுதி வைக்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நிவேதா , ஹரிகரன் கூட்டாளி கார்த்திக் ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணாராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரங்கள் மற்றும் பீரோவில் இருந்த 70 ஆயிரம் ரூபாயை திருடி விட்டு காரைக்குடிக்கு தப்பிச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவத்துக்கு முன்பு கணவன் கிருஷ்ணாராம், தனது மகளிடம் பேசாவிட்டாலும், பங்கஜவள்ளி தனது மகள் மீது பாசம் காட்டியதோடு நிவேதாவுக்கு அவ்வப்போது பண உதவியும் செய்து வந்ததால், கிருஷ்ணாராமை கொலை செய்தால் சொத்துக்கள் அனைத்தும் தானாக தனது பெயருக்கு வந்து விடும் என்று நிவேதா தப்புக் கணக்கு போட்டு இந்த கொலையை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

நாடக காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடி பறந்த கிளி , சொத்துக்காக தந்தையையே கொலை செய்த வழக்கில் சிக்கியதால் காதலனுடன் சிறைபறவையாகி கம்பி எண்ணி வருகிறது ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments