திருமணத்திற்கு மறுத்த காதலியை கழுத்தறுத்து கொலை செய்த காதலன்.... 4 ஆண்டு காதலின் கொடூர முடிவு....!
காதலித்த பெண் திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் அவரை வீடு புகுந்து கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தந்தை உதவியோடு அங்கிருந்து தப்பிச் சென்றவனை போலீஸார் கைது செய்தனர்.
திருமணம் செய்துக் கொள்ள மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து கழுத்தறுத்து கொலை செய்ததாக கைதான முகேஷ் இவர் தான்.
தஞ்சாவூர் மாவட்டம் மனக்கரம்பையைச் சேர்ந்த செல்வியின் மகள் அபிராமி. தந்தை பிரிந்து சென்றதால் தாயுடன் வசித்து வந்த அபிராமி, ஆன்லைன் மூலமாக ஆர்டர் பெற்று மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார் அபிராமி.
விசாரணை நடத்திய நடுக்காவேரி போலீஸார் தடயங்களையும் சம்பவம் நடந்த விதத்தையும் ஆராய்ந்து நடந்திருப்பது கொலை தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
எனவே, அபிராமியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்திய போதே,மனத்திடல் கிராமத்தை சேர்ந்த வீரராஜேந்திரன் என்பவரது மகன் முகேஷ், கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார்.
இதனையடுத்து, நடுக்காவேரி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முகேஷிடம் நடத்திய விசாரணையில், அபிராமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர் போலீஸார்.
சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் முகேஷ், அபிராமியை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு குடும்பத்தினருக்கும் இந்த காதல் விவகாரம் தெரியும் எனவும், கடந்த சில மாதங்களாக அபிராமி தன்னுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் தெரிவித்தார் முகேஷ்.
எனவே, திருமணம் குறித்து பேசுவதற்காக அபிராமி தனியாக இருந்த நேரம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் முகேஷ். அப்போது, உனது நடவடிக்கைகள் இப்போது சரியில்லையென முகேஷிடம் தெரிவித்த அபிராமி திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருமணம் செய்துக் கொள்ள முடியாதென அபிராமி திட்டவட்டமாக கூறியதால் தான் எடுத்துச் சென்ற கத்தியால் அவரது கழுத்தை அறுத்தாக முகேஷ் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர், கொலையை மறைக்க வேண்டும் என்பதற்காக அபிராமியின் செல்போனில் இருந்து சென்னையில் உள்ள அவரது அக்காவிற்கு தான் தற்கொலை செய்துக் கொள்வதாக மெசேஜ் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளான் முகேஷ்.
அபிராமியை தான் கொலை செய்து விட்டதை அங்கிருந்தே செல்போன் மூலமாக தனது தந்தை வீரராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளான் முகேஷ். அவர் தனது வயலில் வேலைப்பார்த்து வரும் மகேந்திரனை அழைத்துக் கொண்டு மனக்கரம்பை சென்றுள்ளார்.
அங்கு கையில் கத்தி மற்றும் ரத்தக்கறை படிந்திருந்த சட்டையோடு நின்றிருந்த முகேஷின் ஆடைகளை கழற்றி வாங்கிக் கொண்டார் வீரராஜேந்திரன். மகனை வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் உடைகளை கொள்ளிடம் ஆற்றில் வீரராஜேந்திரன் வீசியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து முகேஷ், வீரராஜேந்திரன், மகேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.
காதல் தோல்வி கொலையில் முடியும் போக்கு அதிகரிப்பதால் கூடுதல் எச்சரிக்கையோடு இளம்பெண்கள் செயல்பட வேண்டுமென தெரிவித்தனர் போலீஸார்.
Comments