கிட்ட வந்தா குதிச்சிடுவேன்.... சிறுமியை எட்டிப்பிடித்து மீட்ட பெண் காவல் ஆய்வாளர்.... பரபரப்பான மீட்புக் காட்சிகள்..!

0 2862

காரைக்குடியில் செல்போனுக்காக 2 வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவை தேடிக் கொள்ள முயன்ற 17 வயது சிறுமியை , பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் எட்டிப்பிடித்து உயிரோடு மீட்டார்.

ஊரே வேடிக்கை பார்க்க 2 மாடி கட்டிடத்தின் முகப்பில் குதிப்பது போல அமர்ந்திருக்கும் இவர் தான் செல்போனுக்காக விபரீத முடிவுக்கு முயற்சித்த 17 வயது சிறுமி..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் . இவரது 17 வயது மகள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல உள்ள நிலையில் எப்போதும் செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் தனது மகளிடம் இருந்து செல்போனை பறித்த அவரது தந்தை அதனை ஒழித்து வைத்ததால், தனக்கு மீண்டும் செல்போன் வேண்டும் என்று அடம் பிடித்த அந்த சிறுமி, தந்தையை மிரட்டும் விதமாக இரண்டு தளங்களை கொண்ட வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக கூறி குதிக்க தயாரானார்

சிறுமி கீழே விழுந்தால் மெத்தையில் விழும் வகையில் கீழே சென்று அக்கம் பக்கத்தினர் சிறுமியை காப்பாற்றுவதில் மும்முரமாக இருந்தனர். ஒரு மணி நேரமாக எவ்வளவோ சமாதானம் சொல்லியும் இறங்கிவர மறுத்து அடம்பிடித்தார் சிறுமி

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மாணவியிடம் பேசினர் . அப்போதும் அவர் கேட்க மறுத்து , குதித்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

அப்போது தீயணைப்பு வீரர்களுடன் அருகில் சென்ற பென் காவல் ஆய்வாளர் அன்னக்கிளி என்பவர் பேசுவது போல அருகில் சென்றார். அவரை கண்டு அந்த சிறுமி குதிக்க முயன்றார், உடனடியாக அவரை கீழே விழுந்து விடாமல் இழுத்துப்பிடித்த காவல் ஆய்வாளர், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சிறுமியை பத்திரமாக மீட்டார்

திமிறிய சிறுமியை குண்டு கட்டாக தூக்கிச்சென்ற காவல் ஆய்வாளர் அன்னக்கிளி மற்றும் தீயணைப்புத்துறையினர் மாணவிக்கு அறிவுரைகள் கூறி தந்தையிடம் ஒப்படைத்தனர்.

பெற்றோர்களே உஷார் உங்கள் வீட்டு பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அப்படி செல்போன் அடிமைகளாக இருந்தால் , நிலைமையின் விபரீதத்தை எடுத்துக் கூறி அவர்களிடம் இருந்து செல்போனை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்து , இது போன்ற விபரீதங்களை தவிர்க்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments