அடையாளம் தெரியாமல் மாறிய முகம்.. ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்கும் ரைசா..!

0 11491
தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நடிகை ரைசா வில்சன் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மருத்துவருக்கு நடிகை ரைசா வில்சன்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முகம் பொலிவு பெற மருத்துவரை நாடி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இழப்பீடு கோரும் நிலைக்கு ரைசா தள்ளப்பட்டதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

நடிகைகள் தங்கள் முகத்தோற்றத்தை அழகாக்கவும், மாற்றியமைக்கவும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ரசிகர்களை கவரும் விதமாக திரையில் எப்பொழுதும் ஜொலிப்பதற்காக பல்வேறு சிகிச்சைகளையும் நடிகைகள் எடுத்துக் கொள்வதுண்டு. அவ்வாறு முகப்பொலிவுக்கு சிகிச்சை எடுக்கச் சென்ற நடிகை ரைசா வில்சன் முகமே வீங்கி போய் ஆள் அடையாளமே தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகையும், மாடல் அழகியுமான ரைசா வில்சன், பியர் பிரேம காதல், வேலையில்லா பட்டதாரி, தனுஷ் ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மை காலமாக படத்தில் சான்ஸ் கிடைக்காமல் இருந்த நடிகை ரைசா வில்சன், தனது முகத்தை அழகுபடுத்துவதற்காக, முகப்பொலிவு சிகிச்சை எடுக்க, ஆழ்வார்பேட்டையிலுள்ள பீஹென்ஸ்ட் என்ற சிகிச்சை மையத்தை அணுகியுள்ளார்.

அங்கிருந்த மருத்துவர்கள் கடந்த மாதம் 25-ம் தேதி போடாக்ஸ் என்ற சிகிச்சையை ரைசைவுக்கு அளித்தாகவும், அதற்கு கட்டணமாக 62,500 ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு பிறகு முகத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் அதிர்ச்சி அடைந்த ரைசா, மீண்டும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை அணுகியுள்ளார். பின்னர், டெர்மா பில்லர்ஸ் என்ற வேறொரு சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அப்படியென்றால் ஏன் முன் கூட்டியே இந்த சிகிச்சையை எடுக்கவில்லை என சண்டை போட்ட ரைசாவை மருத்துவர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.

பின்னர், ஏப்ரல் 17 ஆம் தேதி டெர்மல் ஃப்ரீ ஃபில்லர் (dermal free fillers) என்ற சிகிச்சை ரைசாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாகவும் 65 ஆயிரம் ரூபாய் மருத்துவமனை நிர்வாகம் வசூலித்துள்ளதாக ரைசா கூறுகிறார். கிட்டத்தட்ட முகப்பொலிவுக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்திலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், முகமும் வீங்கியுள்ளது. முகம் வீங்கி போன புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டிருந்த நடிகை ரைசா, மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தான் கேட்ட சிறிய அளவிலான சிகிச்சைக்கு மாறாக வலுக்கட்டாயமாக வேறு சிகிச்சை அளித்ததால்தான் தனது முகம் பாதிப்புக்கு உள்ளானதாகவும் அவர் வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தவறான சிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நடிகை ரைசா வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை கொடுக்காவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மூலம் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, நடிகை ரைசாவின் குற்றச்சாட்டை தோல் மருத்துவரான பைரவி மறுத்துள்ளார். இரண்டு பக்கமும் சரியான தோற்றம் இல்லாத தனது முகத்தை மாற்றும் சிகிச்சை தான் ரைசா செய்து கொண்டதாகவும், முக தோலில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை ரைசா ஏற்கனவே ஒரு முறை செய்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு சுமார் 5 நாட்கள் முகம் வீக்கமாக இருக்கும், என்று அவரிடம் ஏற்கனவே சொல்லி முறையாக கையெழுத்து பெற்று விட்டதாகவும், ஆனால் மருத்துவ முறைகளை சரியாக அவர் பின்பற்றவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இருந்த போதிலும் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஆனால் பணம் பறிக்க முயற்சி செய்வதோடு, பணத்திற்காக தங்களை மிரட்டவும் செய்வதாக குற்றம்சாட்டி இருக்கிறார். அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டாதால் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டுமென நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பதிலுக்கு நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மருத்துவர் பைரவி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments