உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் திடீரென உருகியது ஏன்? - நிபுணர்கள் கருத்து

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப் பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. காலநிலை மாற்றமே பனிப் பாறைகளில் திடீரென வெடிப்புக்கு காரணம் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உத்தரக்காண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அதிகப் பனிப் பொழிவு காரணமாக மலைப் பகுதியில் படிந்திருந்த பனிப் பாறைகள் திடீரென சரிந்தன. பனிப்பாறைகள் உருகி தவுளிகங்கா மற்றும் அலக்நந்தா என்ற ஆறுகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அதிவேகத்தில் வந்த வெள்ளம் காரணமாக ரிசிகங்கா அணை உடைந்ததால் நீர் மின்நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. அங்கு நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய 148 தொழிலாளர்கள், கரையோரப் பகுதி மக்கள் என 170-க்கும் மேற்பட்ட மக்களின் கதி என்ன என்பது குறித்த அச்சம் எழுந்து உள்ளது.
இந்த நிலையில், புவி வெப்பமயமாகுதல் காரணமாக பனிப் பாறைகள் உருகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். காலச் சூழல் மாற்றம் மற்றும் வெப்பமயமாதல் பனிப் பாறைகளின் ஸ்திரத்தன்மை இழந்து உருகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வரும் காலங்களில் காலச் சூழல் மாற்றம் காரணமாக அதிகளவிலான பனிப் பாறைகள் உருகி வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
பனிப் பாறைகளில் வெடிப்பு ஏற்பட்டது மிக அரிய நிகழ்வாக கருதப்படுவதாகவும், செயற்கைக்கோள் மற்றும் கூகுள் வரைபடத் தரவுகளில், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே பனிப் பாறைகள் இருப்பதற்கான தகவல்கள் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் வெள்ள சேதம் ஏற்பட்ட பகுதியில் நீர்நிலைகள் இருந்து இருக்கலாம் என்றும் அதில் வெடிப்பு ஏற்பட்டு விபத்து நடந்ததற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
பாதிக்கப்பட்ட சமோலி, தபோவன், ஜோசிமத் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அப்பகுதிகளில் பனிப்பொழிவோ, மழையோ இருக்காது என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Comments