அஸ்ஸாம் இளைஞர் மரணம்.. ஒரேநாளில் நடைமுறை முடித்து விமானத்தில் பறந்த உடல்... அயோத்தி படம் போல உண்மைச் சம்பவம்..!

0 2258

குடும்ப வறுமையின் காரணமாக அஸ்ஸாமிலிருந்து பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்த இடத்தில், உடல்நலக்குறைவால் இறந்த இளைஞரின் உடலை, மனிதாபிமானம் கொண்ட தன்னார்வலர்கள் அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்து ஒரே நாளில் விமானம் மூலமாக சொந்த ஊரான அசாமுக்கு அனுப்பி வைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தபோது நிகழ்ந்த விபத்தில் இறந்து போன பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடைமுறையை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவலை தழுவி எடுக்கப்பட்ட அயோத்தி திரைப்படத்தைப் போன்றே உண்மையான சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள டோலா மிரி பதேர் கிராமம், சீன எல்லையின் அருகில் அமைந்துள்ளது.

அங்கிருந்து பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்த 26 வயது இளைஞர் ஜான் குஜூர். செக்யூரிட்டி வேலையில் ஈடுபட்டு வந்த ஜானுக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜான் இறந்த நிலையில், அந்த தகவல் அவரது நண்பர் மூலமாக அசாமில் உள்ள குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

வருமானம் ஈட்டச் சென்ற மகன் இறந்த துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், உடலை எவ்வாறு சொந்த ஊருக்கு எடுத்து வருவது என்ற சட்ட வழிமுறைகள் தெரியாமலும் திகைத்தனர். எனவே, தின்சுகியா மாவட்ட ஆட்சியரை குடும்பத்தினர் தொடர்புக் கொண்டு ஜான் உடலை அஸ்ஸாமிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர்.

அவரோ தன்னுடன் ஐ.ஏ.எஸ்ஸில் பயிற்சி பெற்ற தனது நண்பரான திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க, அவரும் உதவுவதாக உறுதியளித்தார்.

உடனடியாக, நெல்லை மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளர் சரவணன், பசியில்லா தமிழகம் என்ற சமூக சேவை அமைப்பைச் சார்ந்த முகமதுஅலி ஜின்னா ஆகியோரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தார் சிவகிருஷ்ணமூர்த்தி.

காலையில் சென்னைக்கு வந்திறங்கிய அவர்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் பட்டினம்பாக்கம் காவல்துறையினரை தொடர்புக் கொண்டனர். பின்னர், சென்னையில் உள்ள கருணை உள்ளங்கள் குழுவினருடன் இணைந்து உடற்கூராய்வு முடிந்த உடலை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் சென்று, பதப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொண்டனர்.

மற்றொரு புறம், விமானம் மூலம் உடலை கொண்டுச் செல்வதற்காக பல்வேறு தரப்பினரின் உதவியைப் பெற்ற குழுவினர், அரசின் அனைத்து வழிமுறைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தினர்.

இதற்கிடையில் அஸ்ஸாமில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு இங்கு நடைபெற்று வரும் நடைமுறைகளை அசாமிய மொழியிலேயே தன்னார்வலரைக் கொண்டு விளக்கியதோடு, அவர்களுக்கு ஆறுதலையும் வழங்கி வந்தனர்.

ஒருவழியாக அனைத்து நடைமுறைகளையும் காலை முதல் மாலைக்குள் நிறைவேற்றிய குழுவினர், அன்றிரவே ஜான் உடலை அவரது சொந்த ஊரான அசாமிற்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

மனிதனின் வலியையும், வேதனையும் உணர்ந்து கொள்ள மொழி தடையில்லை என்பதும் மனித உணர்வே போதுமானது என்பதற்கும் தமிழக தன்னார்வலர்களின் இந்த உதவி மற்றும் ஒரு சாட்சி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments