கடத்தப்பட்ட தொழிலதிபர் நேற்று மீட்கப்பட்ட நிலையில் தோட்டத் தொழிலாளி மர்ம மரணம்.. தேனியில் சம்பவம்

தேனி மாவட்டத்தில், காரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் நேற்று மீட்கப்பட்ட நிலையில் அவரது தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பன்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபரான அந்திரியா அதிசயம் நேற்று காலையில் வாக்கிங் சென்ற போது காரில் வந்த கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், போலீசாரின் தொடர் நடவடிக்கையால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், பணத்திற்காக இந்த கடத்தல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்திரியாவின் தோட்டத்தில் குடும்பத்தோடு தங்கியிருந்து வேலைப்பார்த்து வந்த நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்த சங்கரலிங்கம், நேற்று மாலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மீனா ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், தொழிலதிபர் கடத்தலுக்கும், தொழிலாளி மரணத்திற்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments