முகப்பு
தமிழ் ராக்கர்ஸின் சிஷ்யன்.. ஐ பொம்மா ரவி கைது.. திரையுலகினர் மகிழ்ச்சி..!
Nov 20, 2025 01:28 AM
330
தமிழ் ராக்கர்ஸ் சிஷ்யன் வசமாக சிக்கினார்.. 21 ஆயிரம் படங்களுடன் வீடியோ தளம் முடக்கம்..
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளர் ஹிந்தி ஆங்கிலம் என எந்த மொழி படம் திரையரங்கில் வெளியானாலும் முதல் காட்சியிலேயே திரையரங்கில் செல்போன் காமிரா மூலம் படம் பிடித்து சூட்டோடு சூடாக ஆன் லைனின் பதிவேற்றம் செய்து வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தற்போது 1tamilmv.pink, tamilprint.com வித வித பெயர்களின் உருமாறி திரையுலகினரின் வருமானத்துக்கு வேட்டு வைத்து வருகின்றது.
இதே போல தெலுங்கில் i bomma.com என்ற திருட்டு வீடியோ தளம் இயங்கி வந்தது. பப்பம் டிவி என்ற பெயரில் 24 மணி நேரமும் எந்த ஒரு திரைப் படத்தையும் பதிவிறக்கம் செய்யாமல் பார்க்கும் வசதியையும் இந்த தளம் கொடுத்து வந்தது.
இது குறித்து நீண்ட நாட்களாக புகார்கள் வந்த நிலையில் விசாகபட்டினத்தை பூர்வீகமாக கொண்ட ரவி என்கிற i bomma ரவி என்பவர் இதனை நடத்தி வருவதை கண்டறிந்தாலும் வெளி நாடுகளில் உள்ள ஐபி மூலம் இயங்கும் இந்த தளத்தை முடக்க இயலவில்லை, வெளி நாட்டில் பதுங்கி இருந்த ரவியை லுக் அவுட் நோட்டீஸ்கொடுத்து போலீசார் தேடி வந்தனர்.
கரீபியன் நாடுகளான செயின்ட் கிட்ஸ், நெவிசின் ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற்ற ரவி அங்கேயே தங்கி இருந்தார் . பல்வேறு நாடுகளின் சர்வர்கள் மூலம் தன்னுடைய சினிமா திருட்டு வியாபாரத்தை கனஜோராக நடத்தி வந்தார் ரவி.
அந்த நாடுகளில் இருந்தபடியே தமிழ், தெலுங்கு,ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களையும் எவ்வித அனுமதியும் இல்லாமல் தன்னுடைய வெப்சைட், ஆன்லைன் டிவி ஆகியவற்றில் வெளியிட்டு வந்தார் ரவி.
இந்த நிலையில் ஹைதராபாத் அருகே அவருக்கு சொந்தமாக இருக்கும் அடுக்குமாடி வீடு உள்ளிட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்வதற்காக செயின் கிட்ஸ் நாட்டிலிருந்து ஹைதராபாத் வந்து சேர்ந்த அவரை மாநில சைபர் கிரைம் போலீசார் விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
அப்போது அவர் தன்னுடைய ஹார்டு டிஸ்கில் பல்வேறு மொழிகளை சேர்ந்த 21,000 திரைப்படங்களை சேமித்து வைத்து இருப்பதையும் இடையிடையே ஆன்லைன் கேமிங் , மற்றும் சூதாட்ட விளம்பரங்கள் மூலம் ஏராளமாக பணம் சம்பாதித்ததும் தெரிய வந்தது.
தமிழ் ராக்கர்ஸ் போன்ற திருட்டு வீடியோ தளங்களை பார்த்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த இணையதளத்தை துவங்கியதாகவும், ஆரம்பத்தில் புதிய படங்களை தானாக திரையரங்குகளுக்கு சென்று படம் பிடித்து பதிவேற்றிய ரவி அதிக வருமானம் வர தொடங்கியதால் பாஸ் ஆனார். படத்தின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு ஒரு படத்தை படம்பிடித்து வந்து முதல் ஆளாக தனது டெலிகிராம் கணக்கில் பதிவேற்றும் நபரின் வங்கிகணக்கிற்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பியது தெரியவந்தது.
குறுகிய காலத்தில் இந்த திருட்டு வீடியோ தொழில் மூலம் 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் சராசரியாக இந்த திருட்டு வீடியோ இணையதளம் மூலம் மாதம் 15 லட்சம் ரூபாய் வரை அவருக்கு வருமானமாக கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர் நடத்தி வந்த ஐபோமா வெப்சைட், பப்பம் டிவி ஆகியவற்றை போலீசார் அவருடைய கையாலேயே முடக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த திருட்டு தொழிலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஐ பொம்மா ரவியின் இந்த செயல்பாடுகள் காரணமாக திரைத்துறைக்கு இதுவரை பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தெலுங்கு திரையுலகினர் 2024 ஆம் ஆண்டு மட்டும், 3400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்
ஐ பொம்மா ரவியை கைது செய்து திரை உலகிற்கு நல்ல செய்தியை அறிவித்த தெலுங்கானா போலீசாரை நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா மற்றும் சினிமா இயக்குநர் ராஜமவுலி ஆகியோர் உள்ளிட்ட பல திரை உலக பரபலங்கள் பாராட்டினர்
தமிழ் திரையுலகை அழித்து வரும் ஆன் லைன் மூவி திருடர்களை எப்போ பிடிக்க போறிங்க ? என்பதே இங்குள்ள தயாரிப்பாளர்களின் ஆதங்க கேள்வியாக உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu