தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
BIG STORIES
AI மூலம் காதலியுடன் குடித்தனம் நடத்திய சென்னை காதலன் கைது..! இதயம் முரளியே தோத்துருவாருப்பா..!
Nov 13, 2025 01:37 AM
241
காதலித்த பெண்ணிடம் காதலை சொல்ல தைரியம் இல்லாமல் அந்த பெண்ணின் படத்தை வைத்து AI தொழில்நுட்பம் மூலம் வித விதமாக கற்பனை வீடியோக்களை உருவாக்கி மானசீகமாக குடித்தனம் நடத்தி வந்த இளைஞரை சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
ஒரு பெண்ணை உருக உருக காதலித்து கடைசி வரை காதலை சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்தே உயிரை விடுவது போல படங்களில் கிளைமேக்ஸ் இருக்கும்... தற்போது தொழில் நுட்பம் வளர்ந்தாலும் அதே காதல்.. அதே இதயம் முரளி டைப் இன்னசண்ட் பாய்ஸ் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்...!
நிஜத்தில் தனது காதலை சொல்ல தைரியம் இல்லாத gen z இளைஞர் ஒருவர் AI மூலம் வித விதமான வீடியோக்களை உருவாக்கி காதலியுடன் குடும்பம் நடத்திய புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தனது புகைப்படங்களை பயன்படுத்தி தன்னை ஏ.ஐ மூலமாக ஒருவர் , திருமணமானது போல் தவறாக சித்தரித்து உள்ளார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த இளைஞர் ஒரு தலை காதலால் விபரீதமாக சிந்தித்து தான் விரும்பிய அந்த பெண்ணுடன் ஏ ஐ மூலமாகவே குடும்பம் நடத்தி இருப்பது தெரியவந்தது.
அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்து பார்த்தபோது தான் காதலித்த பெண்ணின் புகைப்படத்தை ஏ.ஐ. மூலமாக தனது கற்பனை உலகில் வித விதமாக உருவாக்கி அந்த வாலிபர் சிறகடித்து பறந்தது தெரியவந்தது.
அந்த பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று இவர் சொல்வது போலவும் , அந்த காதலை அந்தப் பெண் ஏற்றுக் கொண்டதும் மகிழ்ச்சி கடலில் திளைப்பது போலவும், வீடியோ மற்றும் புகைப்படங்களை தயாரித்த அந்த இளைஞர் அடுத்த கட்டமாக அந்த பெண்ணுடன் வெளியில் ஜாலியாக ஊர் சுற்றுவது, அவரை திருமணம் செய்து கொள்வது ஆகிய புகைப்படங்களையும் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஏ.ஐ. காதலியை திருமணம் செய்து கொண்டதோடு நிறுத்த வில்லை கற்பனை அதி தீவிரமாக ரெக்கை கட்டி பறந்ததால், ஏ ஐ மூலமாக குழந்தையை பெற்றெடுத்தது, அந்த குழந்தை மற்றும் அந்த பெண்ணுடன் குடும்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வீடியோக்களை எல்லாம் பார்த்து அதிர்ந்து போன சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணை தான் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், தனது காதலை அந்த பெண்ணிடம் சொல்ல தைரியம் இல்லாததால் , அந்த பெண்ணின் புகைப்ப்டத்தை வைத்து தனக்கு தோன்றிய விதத்தில் ஏ.ஐ வீடியோ மற்றும் புகைபடங்களாக உருவாக்கி அவருடன் கற்பனையில், குடும்பம் நடத்தி வந்ததாக தெரிவித்தார்.
இதை அடுத்து பெண்ணை ஆபாசமாக சித்தரித்த புகாரில் அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
இது போன்ற சைபர் கிரைம் குற்றங்களுக்கு எல்லாம் குறுகிய காலமே சிறை தண்டனை என்பதால், நீங்களே காவல் நிலைய ஜாமீனில் விட்டு விடலாமே என்று கோர்ட்டில் இளைஞரின் தரப்பில் கேட்கப்பட்ட நிலையில் , பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை எடுத்துக்கூறிய போலீசார் இனி இது போன்று மற்றவர்கள் செயல்படக்கூடாது என்பதற்காக கோர்ட்டில் வாதாடி , நீதி மன்ற உத்தரவின் பேரில் அந்த ஒரு தலை ராக நாயகனை சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை இன்றைய gen z இளைஞர்கள் சிலர் விபரீதமாக பயன்படுத்துவது, பெண்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu