முகப்பு
90'ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத நபர் காலமானார்.. யார் இந்த பியூஷ் பாண்டே?
Oct 26, 2025 04:27 AM
1081
'கிரியேட்டிவிட்டி கிங்' காலமானார்..! யார் இந்த பியூஷ் பாண்டே? முழு பின்னணி
40 ஆண்டுகளாக இந்தியாவின் விளம்பரத் துறையில் ஜாம்பவானாக வலம் வந்த பியூஷ் பாண்டே, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வெள்ளிக் கிழமையன்று தனது 70வது வயதில் காலமானார். யார் இந்த பியூஷ் பாண்டே? விரிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
1982-ஆம் ஆண்டு ஓகில்வி (Ogilvy) என்ற விளம்பர நிறுவனத்தில் முதல் முறையாக பியூஷ் பாண்டே இணைந்தார். சன்லைட் டிடர்ஜென்ட் பவுடருக்காக அவர் முதன்முதலில் விளம்பரம் எழுதினார். அதனை தொடர்ந்து Fevicol, Cadbury, Asian Paints, லூனா மொபெட் (Luna Moped), ஃபார்ச்சூன் ஆயில் (Fortune Oil) உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கு அவர் உருவாக்கிய விளம்பர கான்செப்ட் அனைவரையும் கவர்ந்தது.
முன்பெல்லாம் இந்தியாவில் சாக்லேட் என்பது சிறுவர்களுக்கானது என்று இருந்தது. ஆனால் தற்போது காதலன் காதலிக்கு உயர் ரக சாக்லேட்களை பரிசாக அளிப்பது வாடிக்கையாகியுள்ளது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் பியூஷ் பாண்டே.
Cadbury விளம்பரத்தில், ஒரு கிரிக்கெட் போட்டியில், தனது காதலன் சதம் விளாசியதும், காதலி மகிழ்ச்சியில் பெரிய சாக்லேட் பாருடன் மைதானத்திற்குள் ஓடி வந்து நடனமாடுவார். இந்த விளம்பரம் பாலின பாத்திரங்களை உடைத்ததாக போற்றப்பட்டதுடன், சாக்லேட் என்பது குழந்தைகளுக்கு மட்டுமன்றி எல்லா வயதினருக்கும் உரியது என்பதை உணர்த்தியது.
பெஃவிக் குவிக் விளம்பரத்தில், ஒரு நபர் நீண்ட நேரமாக தூண்டில் போட்டு மீனுக்காக காத்திருப்பார். ஆனால் அங்கு வந்த மற்றொரு நபர், பெஃவிக் குவிக் தடவி தூண்டிலை வீசியதும், மீன்கள் தூண்டிலில் ஒட்டிக் கொள்ளும். இப்படி க்ரியேடிவ்வான ஐடியாக்கள் மூலம் பியூஷ் பாண்டே மக்களை கவர்ந்தார்.
ஃபெவிகால் விளம்பரத்தில், ஒரு கோழி ஃபெவிகால் டின்னிலிருந்து "உணவு" உண்ட பிறகு, உடையாத முட்டையைப் போடுவது போல் காட்டப்பட்டது. இப்படி நகைச்சுவையான விளம்பரங்களை உருவாக்குவதில் பியூஷ் பாண்டே கைதேர்ந்தவர்.
ஏசியன் என்ற பெயின்ட் நிறுவனத்திற்கு, 'மகிழ்ச்சிக்கும் நிறமுண்டு' என இந்தியில் இவர் உருவாக்கிய வாசகம் மிகவும் பிரபலமானது. 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இவர் உருவாக்கிய ‛‛ஆப் கி பார் மோடி சர்கார்'' என்ற வாசகவும் பிரபலமானது.
பியூஷ் பாண்டேவின் தலைமையின் கீழ் ஓகில்வி நிறுவனம் இந்தியாவின் நம்பர் 1 விளம்பரக் கம்பெனியாகத் திகழ்ந்தது. 2013-இல் பியூஷ் பாண்டே சினிமாவிலும் நடிகராகக் களமிறங்கி, ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே (Madras Cafe) படத்தில் அவர் நடித்தார். மேலும் போபால் எக்ஸ்பிரஸ் (Bhopal Express) என்ற படத்திற்குத் திரைக்கதையும் அவர் எழுதியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பியூஷ் பாண்டேவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்தது. பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் இந்திய விளம்பரத்துறை நிபுணர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
மும்பை சிவாஜி பார்க் பகுதியில் வசித்து வந்த அவர் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பியூஷ் பாண்டே மறைந்தாலும், விளம்பரத்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் என்றும் பேசப்படும்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu