அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
BIG STORIES
ரோபோ சங்கர் உயிரிழப்பின் பகீர் பின்னணி வெளியானது.. இதனை செய்ததால் இழப்பா.?
Sep 19, 2025 12:53 AM
1704
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 46. தனது திரைப்படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்த ரோபோ சங்கர் , திரையுலகினரை கலங்க வைத்து சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
மதுரை மண்ணின் மைந்தன்... ஒரு நாளைக்கு 75 முட்டை வெள்ளைக்கரு சாப்பிட்டு கட்டுடல் வைத்திருந்த பாடி பில்டர்..! கமல்ஹாசனை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட ஏகலைவன்..!
உடல் முழுவதும் மெட்டல் பெயிண்டை பூசிக் கொண்டு நூற்றுக்கணக்கான மேடைகளில் ரோபோ போல ஆட்டம் ஆடியதால், ரோபோ சங்கர் என்று அன்போடு அழைக்கப்பட்ட திறமையாளன் 46 வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் கலைஉலகை கலங்க வைத்துள்ளது
மதுரையில் மேடை கலைஞனாக இருந்து 1997 ஆம் ஆண்டு சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்த சங்கர் என்கிற ரோபோ சங்கர் , தர்மசக்கரம் என்ற படத்தில் துணை நடிகராக கூட்டத்தில் ஒருவராக நடித்தார். கலை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்ற போது நடன கலைஞரான பிரியங்காவை காதலித்த ரோபோ சங்கர் 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பலகுரலில் பேசி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ரோபோ சங்கர். விஜயகாந்தின் குரல் இவரது தனிச்சிரப்பு
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் “தீபாவளி, இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா”, ஆகிய படங்கள் பெரிய திரையில் ரோபோ சங்கரை வெளியே தெரியவைத்தது
தனுஷுடன் மாரி படத்தில் முழு நீள காமெடியனாக திரையில் தோன்றிய ரோபோ சங்கருக்கு, வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன் படம் நல்ல பெயரை பெற்று தந்தது
தொடர்ந்து அஜீத்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் புலி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், உள்ளிட்ட படங்களும் ரோபோ சங்கரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது
50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரோபோ சங்கர் இலங்கை, துபாய், சிங்கப்பூர் என்று வெளி நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றுவந்த போது நண்பர்களுடன் மதுவுக்கு அடிமையானார். அதன் காரணமாக உடலை கவனிக்க தவறி உடல் எடை கூடியதோடு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து உடல் நலம் பெற்று திரும்பினார்.
உடல் நலம் பெற்று திரும்ப நடிகர் தனுஷ் பெரிய அளவில் நிதி உதவி அளித்து தன்னுடைய வாழ்வில் கைதூக்கி விட்டதாக ரோபோ சங்கரே தெரிவித்தார்.
பிகில் படத்தில் பாண்டியம்மாளாக நடித்த தனது மகள் இந்திரஜாவுக்கு ஊர் மெச்ச திருமணம் செய்து வைத்த ரோபோ சங்கர், திருமணத்தில் மனைவியுடன் ஜோடியாக போட்ட ஆட்டம் இணையத்தை கலக்கியது
அதன் பின்னர் ரோபோ சங்கர் உடல் எடையை குறைத்து மீண்டும் தன்னை மறு உருவாக்கம் செய்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றாலும் உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவற்றையும் கடைபிடித்து வந்தார். மது அருந்துவதை முற்றிலும் கைவிட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அண்மையில் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டுவிழாவுக்கு சென்ற ரோபோ சங்கர், விழா தொடங்குவதற்கு முன்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் , கமல்ஹாசன் ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
கடந்த 16 ஆம் தேதியன்று, சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்ற 'காட்ஜில்லா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையில் பங்கேற்று ரோபோ சங்கர் பேசினார்.
அன்று மாலையே சென்னையில் படப்பிடிப்பில் இருந்த ரோபோ சங்கர் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வென்டிலேட்டர் மூலம் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி ரோபோசங்கர் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கமல்ஹாசனால் நட்சத்திரன் என்று பெயர் சூட்டப்பட்ட தனது பேரனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து திரையுலகில் குழந்தை நட்சத்திரம் தொடங்கி திரையுலகில் பெரிய இடத்துக்கு கையை பிடித்து அழைத்துச்செல்ல வேண்டும் என்பது ரோபோ சங்கரின் கனவாக இருந்தது. ஆனால் அவரது வாழ்க்கை 46 வயதிலேயே முடிந்து போனது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ரோபோ சங்கர் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி தனது உடலை கவனிக்காமல் , பழையபடி உணவு பழக்கங்களை மேற்கொண்டதே காரணம் என்று சிலர் கூறினாலும் , பழைய நோய் பாதிப்பின் தொடர்ச்சியாகவே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவருக்கு நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu