முகப்பு
அமெரிக்காவில் 'சமையல் ஆஸ்கர்' விருதை வென்ற செம்ம தமிழர்..அப்படி என்ன சமைத்தார் தெரியுமா?
Jun 20, 2025 07:48 AM
92
தமிழ்நாட்டை சேர்ந்த கருப்பு தோலுடன் இருக்கும் தான் இப்படி ஒரு இடத்தில் இருப்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. அக்கறையுடன், ஆன்மாவுடன் சமைத்த உணவு தான், தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது! என அமெரிக்க சமையல் உலகின் டாப் விருதான ”ஜேம்ஸ் பியர்ட் விருதை வென்ற, செஃப் விஜயகுமார் கூறிய உணர்ச்சிப் பொங்கும் வார்த்தைகள் தான் இவை...
'ஜேம்ஸ் பியர்ட் விருது!' - இந்த விருதை சமையல் உலகின் 'ஆஸ்கர் விருது' என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு சமையல் கலைஞரும் இந்த விருதை, என்றாவது ஒருநாள் தங்கள் கையில் வாங்க மாட்டோமா! என சமையல் கரண்டிகளுடன் தவம் இருக்கும் ஒரு உண்ணதமான விருது!. அப்படிப்பட்ட இந்த விருதை தான் சும்மா அலேக்காக தூக்கிவந்து, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெருமை சேர்ந்திருக்கிறார் செஃப் விஜயகுமார்.
மதுரை மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். சிறுவயதில் விடுமுறைக்காக தனது பாட்டியின் ஊரான அரசம்பட்டிக்கு சென்று, அங்கு தனது பாட்டியிடம் சமையல் கலையை கற்றுக்கொண்டார் விஜயகுமார். சென்னையில் உள்ள பிரபல தாஜ் கன்னிமரா ஹோட்டலில் சிறிது காலம் சமையல் கலைஞராக பணியாற்றிய விஜயகுமார் பிறகு, அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். ஆரம்பத்தில் அமெரிக்காவின் பல்வேறு உணவகங்களில் சமையல் கலைஞராக பணியாற்றிவந்த இவர், 2021 ஆம் ஆண்டில் நியூயார்க், கிரீன்விச்சில் ”செம்ம” என்ற பெயரில் உணவகத்தை தொடங்கினார்.
இந்த உணவகத்தில் நத்தை பிரட்டல், இரால் தொக்கு, நரி வால் தினை கிச்சடி போன்ற உணவுகள் மிகவும் சுவையாக தயாரிக்கப்படுகிறது. மேலும் உணவுகள் களிமண் பானைகளிலும், வாழை இலையிலும் பரிமாறப்படுகிறது. ஆனால் இந்த உணவகத்திற்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான், சாப்பிட வருபவர்கள் கையில் தான் உண்ண வேண்டும்! இதனாலே அந்த ஊரில் மிகவும் பிரமலமான உணவகமாக இது இருந்துவருகிறது.
அதுமட்டுமின்றி, நியூயார்க்கின் மிச்செலின் ஸ்டார் விருதில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இடம்பிடித்து வரும் ஒரே இந்திய உணவகம் என்ற இன்னொரு சிறப்பும் இந்த உணவகத்திற்கு உண்டு.
இந்த நிலையில், தனது பாட்டியின் ரெசிபியான, நத்தை கறி செய்து அசத்தி, நியூயார்க் மாநிலத்தின் சிறந்த சமையல்காரருக்கான ’ஜேம்ஸ் பியர்ட் விருதை வென்றிருக்கிறார். இந்த விருதை வாங்க செல்லும்போது விஜயகுமார் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டியில் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதைத்தொடர்ந்து, அந்த விருது வாங்கிய பின் பேசிய விஜய குமார், "நான் சமைக்கத் தொடங்கியப் போது, தமிழ்நாட்டில் இருந்து வரும் என்னைப் போன்ற ஒருவர் இந்த விருதை பெற முடியும் என்று நினைக்கவில்லை. நான் வளரும் போது உண்ட உணவுகள் எல்லாம் அன்பு, ஆன்மா மற்றும் நெருப்பால் செய்யப்பட்டவை என கூறியிருக்கிறார்.
தான் ஒரு இன்ஜினீயராக வேண்டும் என்ற கனவு இருந்த விஜயகுமாருக்கு, இன்ஜினீயரிங் படிக்க போதுமான பணம் இல்லாததால், செஃப் படிப்பை தேர்தெடுந்தார். தற்போது இவர் தான், அந்த ஊரின் அடையாளமாகவே மாறியிருக்கிறார்.
”ஏழைகளுக்கான உணவு, பணக்காரர்களுக்கான உணவு என எதுவும் இல்லை. அது உண்மையாக இருந்தால், அது சக்தி வாய்ந்தது ஆகும். உண்மையான ஆடம்பரம் என்பது ஒரு மேஜையில் அனைவரும் இணைவது தான்" என்று கூறியிருக்கும் விஜய குமார், சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இந்தியாருக்கும் ஒரு செம்ம ரோல்மாடல்!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu