முகப்பு
"ஆடுகளம் வெற்றிக்கு காரணமானவர் " .. பாலுமகேந்திராவின் சீடர் விக்ரம் சுகுமாரன் காலமானார்..! பேருந்தில் நேர்ந்த சோகம்..
Jun 02, 2025 12:30 PM
94
பிரபல இயக்குனரும் வசனகர்தாவும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் உயிரிழந்த சம்பவம் சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த விக்ரம் சுகுமாரன், சினிமாவில் பணியாற்ற வேண்டும் என பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
அங்கு இயக்குனர் வெற்றிமாறனோடு ஏற்பட்ட நட்பு காரணமாக அவர் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடித்திருந்தார். மேலும் வெற்றிமாறன் இயக்கி தேசிய விருதுகளை குவித்த 'ஆடுகளம்' திரைப்படத்தின் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரனின் பங்களிப்பு அதிகம் என வெற்றிமாறனே மேடைகளில் பேசியுள்ளார்.
"நாங்க சுனாமியிலேயே ஸ்விம்ங்க போடுவோம்" போன்ற பல வசனங்கள், 'ஒத்த சொல்லால' பாடலில் தனுஷ் லுங்கி டான்ஸ் ஆடுவது ஆகிய அனைத்தும் விக்ரம் சுகுமாரனின் ஐடியா தான் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடிகர் கதிர், ஓவியாவை வைத்து 'மதயானை கூட்டம்' திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கினார். அந்த திரைப்படத்தில் நடித்த கதிர், கலையரசன், வேல ராமமூர்த்தி போன்றவர்களுக்கு பல அடுத்தடுத்த வாய்ப்பை அந்த திரைப்படம்,பெற்றுக் கொடுத்தது. அந்த படம் இன்றளவும் பெரிதாக பேசப்பட்டாலும் "அதனால எனக்கு ஒரு சோப்பு டப்பா கூட கிடைக்கல", 6,7 வருஷம் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக விக்ரம் சுகுமாரனே வேதனையோடு குறிப்பிட்டிருந்தார்.
2023 ஆம் ஆண்டு நடிகர் சாந்தனுவை வைத்து அவர் இயக்கிய 'இராவண கோட்டம்' திரைப்படம் சாதி கலவரங்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலையும் சீமைக்கருவேல மரங்களுக்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் அரசியலையும் பேசியது. அதே நேரத்தில் இந்த திரைப்படம் ஏராளமான விமர்னசங்களுக்கும் உள்ளானது.
இந்த நிலையில், விக்ரம் சுகுமாரன் நேற்று மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவனைக்கு அழைத்து சென்றபோது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
நடிகர் சாந்தனு தனது சமூக வலைதள பக்கத்தில், உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன், ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் போற்றுவேன். மிக விரைவில் போய்விட்டது. உங்களை மிஸ் பண்ணுவோம்" என விக்ரம் சுகுமாரனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu