RECENT NEWS

3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் - ஈரான் மோதல்

BIG STORIES

அரை வினாடி தூக்கத்தால் 50 அடி ஆழ கிணற்றில் 5 பேர் மூழ்கி உயிரிழந்த சோகம்..!

May 18, 2025 06:59 AM

528

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலய பிரதிஷ்டைக்காக, கோவையில் இருந்து குடும்பத்துடன் 8 பேர் சென்ற ஆம்னி வேன் தரைமட்ட கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில், காருடன் நீரில் மூழ்கிய 5 பேர் பரிதாபமாக பலியாகினர்

கோயம்புத்தூர் துடியலூரை சேர்ந்த மோசஸ் என்பவர் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு இவர் தனது மனைவி வசந்தா , மகன் கெர்சோம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் விளைக்கு மாருதி எக்கோ காரில் புறப்பட்டார்.

காரில் மொத்தம் 8 பேர் பயணித்த நிலையில் காரை மோசஸ் ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது. காலையில் பாபநாசம் சென்று அங்குள்ள அருவிகளில் குளித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். மாலை 5 மணியளவில் கார் பேய்க்குளம் அடுத்த மீரான்குளம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தரைமட்ட கிணற்றுக்குள் பாய்ந்தது.

கிணற்றுக்குள் பக்கவாட்டு சுவற்றில் மோதிய வேகத்தில் காரின் ஒரு பக்க கதவு திறந்து கொண்டதாகவும், காருக்குள் இருந்த மோசஸின் மகன் கெர்சோம், மருமகள் சனி கிருபாகரன், உறவினர் மகள் ஜெனிபா எஸ்தர் ஆகிய 3 பேரும் நீரில் தத்தளித்து பக்கவாட்டு படிக்கட்டு வழியாக மேலே ஏறி உயிர் தப்பினர்.

காரை ஓட்டிவந்த மோசஸ், அவரது மனைவி வசந்தா, பேரன் ஸ்டாலின், பீளமேடு சேர்ந்த உறவினர் ரவி கோவில் பிச்சை அவரது மனைவி ஹெத்சிபா கிருபா ஆகிய 5 பேரும் காருக்குள் சிக்கிக் கொண்டதால் வெளியே வர இயலவில்லை. நீரில் மூழ்கி பலியாகினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீரான்குளம் கிராம மக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் 4 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் ஆழ்கடல் நீச்சல் வீரர்களை வரவழைத்தனர். அவர்கள் நீருக்குள் மூழ்கிச்சென்று 50 அடி ஆழ கிணற்றில் சேற்றில் சிக்கி இருக்கும் தகவலை தெரிவித்தனர்

பின்னர் காரை கயிறு கட்டி கிரேன் மற்றும் ஜே.சி.பி உதவியுடன் காரை மேலே தூக்கிக் கொண்டு வந்தனர். காருக்குள் இருந்து மோசஸ் உள்ளிட்ட 5 பேரின் சடலங்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிணக்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சிதலைவர் இளம்பகவத், மாவட்ட எஸ்.பி ஆல்பட் ஜான் ஆகியோர் விரைந்து வந்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான போலீசாரின் விசாரணையில் அரை நொடி தூக்கத்தால் உண்டான விபரீதம் தெரியவந்தது. இரவு கடையை அடைத்து விட்டு சொந்த ஊரில் நடக்க இருக்கின்ற தேவாலய பிரதிஷ்டைக்காக அனைவரும் மாருதி எக்கோ காரில் புறப்பட்டு வந்துள்ளனர். உறவினரின் திருமண நிகழ்ச்சியும் இருந்ததால் அதிலும் பங்கேற்று விட்டு ஊர் திரும்பும் திட்டத்துடன் வந்ததாக கூறப்படுகின்றது.

கோவையில் இருந்து பாப நாசம் சென்று விட்டு நெல்லை வரும் வரை தேசிய நெடுஞ்சாலையில் காரை மோசஸின் மகன் கெர்சோம் ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது.

பின்னர் கிராமப்புற சாலையில் கவனமாகவும், மிதமான வேகத்திலும் செல்ல வேண்டும் என்பதற்காக, மோசஸ் தான் ஓட்டுவதாக கூறி நெல்லையில் இருந்து அவர் காரை ஓட்டி வந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இரவு போதிய தூக்கமில்லாததாலும், அருவியில் ஆசைதீர குளித்த களைப்பிலும், வழியில் அரை நொடி கண் அயர்ந்ததால் , கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி கிணற்றுக்குள் பாய்ந்தது தெரியவந்துள்ளது.

ஓட்டுனர்கள் தூக்கம் வரும் சூழல் வந்தால் கூடுமானவரை வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் தூங்கி விட்டு வாகனத்தை இயக்கலாம், அதை விடுத்து நாம் போய் சேரும் இடம் பக்கத்தில் தானே என்று தொடர்ந்து வாகனத்தை இயக்க முயற்சித்தால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த விபரீத விபத்து மற்றும் ஒரு சாட்சி.

அதே நேரத்தில் சாலையோரத்தில் , ஆபத்தாக உள்ள இதுபோன்ற தரைமட்ட கிணறுகளை கண்டறிந்து முறையாக தடுப்பு சுவர்கள் அமைத்து இது போன்ற கோர விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் பஞ்சாயத்து விவகாரம்.. பூவை ஜெகன்மூர்த்தி எங்கே..? சிறுவன் கடத்தல் வழக்கு பின்னணி..! காவல் அதிகாரி வாகனம் சிக்கியது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies