காரால் அடித்து தூக்கியதால் கால்கள் உடைந்து சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெண்..! உதவுவதாக கூறி தப்பிய செல்வந்தர்
கோவையில் அதிவேகத்தில் காரை ஓட்டி, இருசக்கரவாகன ஓட்டி மற்றும் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணை அடித்து தூக்கிய வடமாநிலத் தொழில் அதிபரை பிடித்து விசாரித்து வரும் போலீசார், அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளதாக, காயம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கோவையில் அதிவேகமாக காரை ஓட்டி பெண்ணை அடித்து தூக்கிவிட்டு பொதுமக்களிடம் சிக்கியதும், கையெடுத்து கும்பிட்டு பெண்ணின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்வதாக கூறும் இந்த அரைடவுசர் ஆசாமி தான், வட மாநில தொழில் அதிபர் உத்தம் குமார்..!
கோவை ஆர்.எஸ்.புரம் சாலையில் செவ்வாய் கிழமை அதிவேகத்தில் ஹூண்டாய் வெர்னா காரை ஓட்டி வந்த உத்தம் குமார், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியில், இருசக்கரவாகன ஓட்டியை இடித்து தள்ளிவிட்டு , வலது பக்கம் ஏறிச்சென்று சாலையோரம் நடந்து சென்ற லீலாவதி என்ற பெண்ணை அடித்து தூக்கியதாக கூறப்படுகின்றது
கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட லீலாவதிக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது தலை இடுப்பு பகுதிகளில் பலத்த காயங்களுடன் சுய நினைவிழந்தார். அதிவேக காரை பொதுமக்கள் மடக்கினர். இதையடுத்து காரில் இருந்து வெளியே வந்த உத்தம் குமார் தான் ஆர். எஸ்.புரத்தில் வசிப்பதாகவும், இந்த அம்மாவின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளை நானே செய்கிறேன் என்று கெஞ்சினார்
இதையடுத்து அவர் சொன்னபடி லீலாவதியை மீட்டு கொங்கு நாடு என்ற தனியார் மருத்துவமனயில் லீலாவதியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது. போக்குவரத்து காவல் துறையினரின் விசாரணையில் வட மாநில தொழில் அதிபரான உத்தம்குமாரின் ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆகி 2 வருடம் ஆனது தெரியவந்தது. அவரையும், அவரது காரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல் ஆய்வாளர் சரோஜா, உத்தம் குமார் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்ற தகவலை தெரிவிக்க மறுத்ததோடு, விபத்தை ஏற்படுத்திய உத்தம் குமாருக்கு ராஜ உபசாரம் நடப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வீடுகளில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்த லீலாவதிக்கு போதிய வசதி இல்லை என்றும், அவரது சிகிச்சைக்கு உதவுவதாக கூறிய தொழில் அதிபர் உத்தம் குமாரும் , போலீசார் ஆதரவு இருப்பதால்,ஏமாற்றி விட்டதாகவும் தற்போது சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்
இந்த விபத்தில் கார் மோதியதால் லேசான காயங்களுடன் ஊயிர் தப்பிய இருசக்கர வாகன் ஓட்டியான சித்தாபுதூர் ஜெயராமன் என்பவர், தனது மொப்பட்டின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்து விட்டதாகவும், போலீசார் தன்னை லைக்கழிப்பதாக தெரிவித்தார்.
Comments