தள்ளு.. தள்ளு.. தள்ளு.. எட்ட எட்ட இருக்கும் பங்க்குகள்! வரிசை கட்டி காத்திருக்கும் சி.என்.ஜி. ஆட்டோக்கள்..!

0 2173
தள்ளு.. தள்ளு.. தள்ளு.. எட்ட எட்ட இருக்கும் பங்க்குகள்! வரிசை கட்டி காத்திருக்கும் சி.என்.ஜி. ஆட்டோக்கள்..!

சென்னை மாநகரில் நாள்தோறும் சி.என்.ஜி.யில் ஓடும் ஆட்டோக்கள் பெருகி வருவதாக கூறப்படும் நிலையில், அவற்றுக்கு போதுமான கேஸ் மையங்கள் இல்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். சவாரி செல்ல வேண்டிய பீக் ஹவர்களில்  நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு நிரப்பும் நிலை உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மாநகரில் பெர்மிட் பெற்று ஓடும் மொத்த ஆட்டோக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரம்! அதில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆட்டோக்கள் சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்குபவை. பொதுவாக, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கிலோ மீட்டர் வரை ஆட்டோக்கள் மைலேஜ் தரும் என்று கூறுகின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். அதுவே, ஒரு கிலோ சி.என்.ஜி. எரிவாயு 45 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறதாம். அதே நேரம், பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 102 ரூபாய் 63 பைசாவுக்கு விற்கப்படும் நிலையில், சி.என்.ஜி.யின் விலை கிலோவுக்கு 84 ரூபாய் 50 பைசா ஆகும்.

பணமும் மிச்சம், மைலேஜும் அதிகம் என்பதால் சி.என்.ஜி. ஆட்டோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெறும் 50 எரிவாயு நிரப்பும் மையங்கள் மட்டுமே உள்ளதால், ஒவ்வொரு கேஸ் பம்ப்பிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறுகின்றனர், ஆட்டோ ஓட்டுநர்கள்.

சி.என்.ஜி. எரிவாயு மையங்கள் ஒவ்வொன்றும் நீண்ட தொலைவில் இருப்பதால், கேஸ் தீர்ந்து போகும் போது வெகு தூரம் தள்ளிக் கொண்டு போகும் நிலை இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியே போனாலும் 2, 3 மணி நேரம் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் சூழல் ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

பெட்ரோல் பங்க் போல, போனவுடன் எரிபொருள் நிரப்பிக் கொண்டு திரும்பி வர முடியாத நிலை சி.என்.ஜி. பங்குகளில் இருப்பதாக தெரிவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், இரவு நேரங்களில் செல்லும் ஆட்டோக்களிடம், எரிவாயு பிரஷர் குறைவாக இருப்பதால் காலையில் வந்து போட்டுக் கொள்ளுமாறு கூறி கேஸ் பங்க் ஊழியர்கள் திருப்பி அனுப்பி விடுவதாக கூறுகின்றனர். காலை நேரத்தில் சென்றாலோ, நீண்ட வரிசை காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர் அவர்கள்.

எரிபொருள் பங்குகளில், சி.என்.ஜி. போடும் பம்ப் வைப்பதற்கு அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. பெட்ரோல் அல்லது டீசல் வெண்டிங் எந்திரங்களுக்கும், சி.என்.ஜி. எந்திரத்துக்கும் இடையே குறைந்தது 50 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பது அதில் தலையாய விதிமுறை. அந்தளவுக்கு இட வசதி கொண்ட பெட்ரோல் பங்குகள் சென்னையில் மிகக் குறைவு என்பதால், சாதாரண பங்குகளில் சி.என்.ஜி. பம்ப்புகள் வைப்பதில்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பிரத்யேகமாக சி.என்.ஜி. எரிவாயு மையங்களை கூடுதலாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments